

சென்னை திருமங்கலம்-நேரு பார்க் இடையே 7.4 கிமீ தொலைவு சுரங்க மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ திட்டத்துக்கு வித்திட்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா என்றார்.
தொடக்க விழாவில் முதல்வர் பேசியதாவது:
தமிழக அரசின் மீதும் தமிழக மக்களின் மீதும் அதிக அக்கறையும் ஈடுபாடும் கொண்ட ஜெயலலிதாவின் பாசத்திற்குரிய மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஜெயலலிதாவின் இடைவிடாத முயற்சி காரணமாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் வழங்கியது. இந்த டிஜிட்டல் உரிமத்தை தமிழ்நாடு அரசு பெறுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த அமைச்சர் வெங்கையா நாயுடு அவர்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான முதல் சுரங்க வழித்தடத்தில் உள்ள 7 சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் நிலையங்களைத் திறந்து வைத்து அவ்வழித்தடத்தில் பயணிகள் சேவையை மத்திய நகர்ப்புற மேம்பாடு, வீட்டு வசதி, நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிடன் இணைந்து, இன்று நான் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
சென்னை பெருநகரப் பகுதியில் பெருகிவரும் மக்கட்தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை ஆகியவற்றால், போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு ஒரு தீர்வாக சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய மாநில அரசுகளின் உதவியுடனும் மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை கடனுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு 2003-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தலைமையிலான அரசால் மேற்கொள்ளப்பட்டு, அந்த ஆய்வின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான 23 கிலோ மீட்டர் தூர வழித் தடம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் முதல் பரங்கிமலை வரையிலான 22 கிலோ மீட்டர் தூர வழித் தடம் என இரு வழித் தடங்கள் தெரிந்தெடுக்கப்பட்டன.
ஜெயலலிதா. 29.6.2015 அன்று கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10.15 கி.மீ. உயர்த்தப்பட்ட வழித்தடத்தில் சென்னை மெட்ரோ இரயிலின் பயணிகள் சேவையை துவக்கி வைத்ததோடு, சென்னை மெட்ரோ இரயிலின் கோயம்பேடு பணிமனை மற்றும் கோயம்பேடு, சென்னை புறநகர்ப் பேருந்து நிலையம் அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்கள்.
மேலும், வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் - விம்கோ நகர் வரையிலான சென்னை மெட்ரோ இரயிலின் முதல் கட்ட நீட்டிப்புத் திட்டத்திற்கு 23.7.2016 அன்று அடிக்கல் நாட்டினார்கள். 3770 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் 9.05 கி.மீ. தூரம் நீட்டிப்பதற்கான இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதில் முக்கிய பங்காற்றியவர்மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு என்று, இத்திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கிவைத்த போது ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்கள். மேலும் இத்திட்டத்திற்கு 93 கோடி ரூபாய் மூலதன பங்களிப்பை பெற பேருதவியாக இருந்த மாண்புமிகு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், வெங்கையா நாயுடுவுக்கு மீண்டும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மெட்ரோ ரெயில் சேவையை மேலும் விரிவுபடுத்திட, 21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான 8.6 கி.மீ. நீளத்திலான இரண்டாவது உயர்த்தப்பட்ட மெட்ரோ இரயில் பகுதியிலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையில் 1.2 கி.மீ. நீளத்திலான பகுதியிலும், பயணிகள் சேவையை ஜெயலலிதா துவக்கி வைத்ததோடு, சென்னை விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலை மெட்ரோ இரயில் நிலையங்களையும் திறந்து வைத்தார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவையாகக் கருதி பயணிகள் சேவையை ஜெயலலிதா அன்று துவக்கி வைத்தார்கள்.
14,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு, 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் 1,143 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டது. 2011-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 13,787 கோடி ரூபாய் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதியை ஒவ்வொரு ஆண்டும் முழுமையாக ஒதுக்கி, திட்டப் பணிகள் குறித்த காலத்தில் முடிவுறத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜெயலலிதா அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
2011 –ஆம் ஆண்டு வரையிலான அப்போதைய தி.மு.க. ஆட்சியில் சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகளில் 3 சதவீதமே முடிவடைந்திருந்தது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா தலைமையிலான அரசு 2011 –ஆம் ஆண்டு மே மாதம் பொறுப்பெற்ற பின்னர், பணிகளை விரைந்து செயல்படுத்தியதன் காரணமாக உயர்த்தப்பட்ட வழித் தடங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் பணிமனையைப் பொறுத்தவரை அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது.
சுரங்க வழித்தடத்தின் முதல் பகுதியான 7.4 கி.மீ. தூரம் உள்ள கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரையிலான பயணிகள் சேவை இன்று துவக்கி வைக்கப்படுகிறது.
விரைவான, வசதியான, நவீன போக்குவரத்து திட்டத்தினை வழங்குவதே சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நோக்கமாகும் என்பதால் குளிர்சாதன வசதி, தானியங்கி ரயில் பாதுகாப்பு, தானியங்கி ரயில் இயக்கம், சிறப்பு இருக்கை வசதி, மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு வசதிகள், பயணிகளுக்கு நிறுத்தம் குறித்த தகவல், அவசரகால வெளியேறும் வசதி, பயணிகளின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட சிறப்பம்சங்களுடன் ரயில் நிலையங்களும் ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் முதற்கட்டத்தில், மீதமுள்ள சுரங்க வழித்தடமான நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வழித்தடம் மற்றும் சுரங்கப்பாதை ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் தோண்டப்பட வேண்டிய 36.4 கி.மீ. சுரங்கப்பாதையில் 34.3 கி.மீ. சுரங்கப்பாதைப் பணிகள் முடிந்துவிட்டன. இவ்வழித்தடம் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளும், எஞ்சியுள்ள சின்னமலை முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்க வழித்தடம் 2018 ஆம் ஆண்டு மத்தியிலும் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில், 54 கி.மீ. நீளத்திலான மெட்ரோ ரயில் வழித்தடங்கள் திட்டமிடப்பட்டு, தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா தலைமையிலான அரசு சென்னை நகரின் விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, மெட்ரோ ரயில் சேவையை மக்களின் பயன்பாட்டிற்காக மேலும் விரிவுப்படுத்திட இரண்டாம் கட்டமாக, மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்களைச் செயல்படுத்த முடிவு செய்து, வரைவு சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கியிருந்தது. அதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையை திருவாளர்கள் ரைட்ஸ் நிறுவனம் அரசிற்கு தயாரித்து அளித்துள்ளது. அவ்வறிக்கையில் 107.55 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்கள் – அதாவது மாதவரம் முதல் சிறுசேரி வரையில் ஒரு வழித்தடமும், சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமும் மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்படும் இந்த அரசு, அவ்வழித்தடங்களை 85,047 கோடி ரூபாய் செலவு மதிப்பீட்டில் செயல்படுத்துவதற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி, மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறவும், மத்திய நகர்ப்புற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் இத்திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் 2016-2017 ஆம் ஆண்டுக்கான சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்க திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் வழங்க வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
2011 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தி.மு.க ஆட்சியின் போது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் பல ஷரத்துகள் மாநில அரசின் நலன்களுக்கு எதிராக இருப்பதாலும், திட்ட செயலாக்க காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்பதாலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் அளித்த கோரிக்கை மனுக்கள் வாயிலாக கேட்டுக்கொண்டார். இது பற்றி விரிவான விவரங்களை மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு நான் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். இது குறித்து மாநில அரசு பாதிக்கப்படாத வகையில் இந்த ஒப்பந்தத்தை மாற்றி அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசை நான் இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வழித்தடங்கள் தற்போது பயன்பாட்டிலுள்ள புறநகர் ரயில், வெளியூர் பேருந்து, மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்தின் பங்கு கணிசமான அளவு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாண்புமிகு அம்மா அவர்களின் திட்டங்களால் சென்னை மாநகரம் உலகத்தரம் வாய்ந்த பன்னாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்து ஈர்க்கும் வகையில் ஒரு நவீன நகரமாக திகழும்.
இந்த திட்டம் முழுமையாக நிறைவேற அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும், உழைப்பாளர் நண்பர்களுக்கும், இந்த இனிய விழாவிற்கு சிறப்பாக ஏற்பாடு செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், மனதார நன்றி கூறுகிறேன்.