

நெல்லை அருகே வெள்ளாளங்குளத்தில் அதிகாலையில் கன்டெய்னர் லாரியும், மாருதி வேனும் மோதியதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சேர்ந்த முருகன் (52) , உலகநாதன் (52) , கணேசபுரத்தைச் சேர்ந்த முருகன் (52) , கடையனோடை சார்ந்த சங்கர் பாசு (35) , உடன்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (30) உள்ளிட்ட 5 பேர், வேன் ஒன்றில் நேற்று குற்றாலம் சென்றுவிட்டு திரும்பினர்.
இவர்கள் பயணம் செய்த மாருதி வேன், நெல்லை அருகேயுள்ள வெள்ளாளங்குளம் எனும் பகுதிக்கு அதிகாலை 2.30 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது, தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்குச் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி எதிரே வந்து நேருக்கு நேர் மோதியது.
இதில், வேனில் பயணம் செய்த முருகன், உலகநாதன், சங்கர் பாசு, ராதாகிருஷ்ணன், முருகன், வேன் டிரைவர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த சீதபருப்ப நல்லூர் போலீஸார், 6 பேரின் உடல்களையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இந்த கோர விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை- தென்காசி நெடுஞ்சாலை பல இடங்களில் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், இரவு நேரங்களில் வேகத்தடைகள் இருப்பதற்கான ஒலி பிரதிபலிப்பான்கள் இல்லாததாலும் பல விபத்துகள் நடப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.