

மத்திய அரசின் உதய் மின் திட்டத்தில் தமிழகம் இணையவில்லை என தமிழக மின் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மின்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசும்போது இது குறித்து அவர் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள உதய் மின் திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக தமிழக அதிகாரிகள் டெல்லி சென்று மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினர்.
இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் உதய் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு முதல்வர் - மத்திய அமைச்சர் சந்திப்புக்குப் பிறகு அத்திட்டத்தில் இணைந்து விட்டதா? என கேள்வி எழுப்பியிருந்தார். அப்படி இணைந்திருந்தால் அதனை உடனடியாக முதல்வர் அறிவித்திருப்பார்.
உதய் திட்டத்தின்படி பெட்ரோல், டீசல் விலையைப் போல மின் கட்டணத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோல தமிழகத்தைப் பாதிக்கும் பல்வேறு அம்சங்கள் அதில் உள்ளன. இதுபோன்ற பாதகமான அம்சங்கள் இருக்கும்வரை உதய் திட்டத்தில் தமிழகம் இணையாது. தமிழக நலன்களுக்கு எதிரான எந்தவொரு முடிவையும் முதல்வர் ஜெயலலிதா எடுக்க மாட்டார்.
இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.