

சேலம்- சென்னை எழும்பூர் ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு, ரயில் பெட்டியில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதேர்ந்த வடமாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சிலர் கூறியதாவது: வடமாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்கள் மிகவும் பாதுகாப்பு நிறைந்த இடங்களில்கூட திட்டமிட்டு கொள்ளையடிப்பதில் கைதேர்ந்தவர்கள். கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் உள்ள பிரபல நகைக்கடையில் சுவரை துளையிட்டு புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த 14 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இச்சம்பவத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கடந்த ஆண்டு கிருஷ்ணகிரி அருகே ராமபுரத்தில் வங்கிக் கிளையில் நடந்த 48 கிலோ தங்க நகைகள் கொள்ளை சம்பவத்திலும், வட மாநிலத்தவர் சம்பந்தப்பட்டிருந்தனர். வட மாநிலங்களில் பல இடங்களில் ரயில் கூரை மீது பயணம் செய்வது சாதாரண விஷயம். அதுபோன்ற பயணத்தில் ரயில் மேற்கூரையை பற்றி அவர்கள் அறிந்து வைத்திருக்க வாய்ப்பு உள்ளது.
ரயில்வே அல்லது வங்கித் துறையில் பணியாற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் மூலமாக ரயிலில் பணம் கொண்டுசெல்லப்படும் தகவல் கொள்ளையர்களுக்கு கிடைத்திருக்கும். எனவே, ரயில்வே துறை ஊழியர்கள், போர்ட்டர்கள், வங்கி ஊழியர்கள் என அனைவரிடமும் நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
சேலத்தில் இருந்து சென்னைக்கு பணத்தை எடுத்துச் செல்வதற்கான ரயில் பெட்டி ஈரோட்டில் 8-ம் தேதி காலை 5.30 மணிக்கு ஈரோடு- மேட்டூர் பயணிகளுடன் இணைக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு சேலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் இந்த பெட்டி சேலம் யார்டில் காலை 10 மணி வரை பாதுகாப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனவே, ஈரோட்டில் ரயில் புறப்படும்போது, பணம் எடுத்துச் செல்ல பயன்படும் ரயில் பெட்டியில் கொள்ளையர்கள் நவீன வெட்டுக்கருவிகள் சகிதமாக உள்ளே புகுந்திருக்க வேண்டும். ரயில் சேலம் வருவதற்குள் மேற்கூரையை வெட்டி துளையை போட்டுவிட்டு, தகரம் வெட்டப்பட்ட இடத்தை மூடி வைத்துவிட்டு, ரயில் சேலம் வந்ததும் பெட்டியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்.
சேலத்தில் பணப்பெட்டிகள் ஏற்றப்படுவதை உறுதி செய்துகொண்டு, அதே ரயிலில் கொள்ளையர்களும் பயணித்திருக்க வேண்டும். வழியில் ஓரிடத்தில் பணத்தை கொள்ளையடித்துக்கொண்டு, பயணிகளோடு பயணிகளாக ரயிலில் பயணித்து, அதே ரயிலில் மும்பை வரை சென்று தப்பித்திருக்க வாய்ப்பு உள்ளது என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.