

பான் மசாலா, குட்கா விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இன்று சட்டப்பேரவையில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய சுகாதாரத் துறை அமைச்சர் லஞ்சம் பெற்றதாக செய்தி வெளியானது குறித்து அனுமதிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கான அனுமதியை சபாநாயகர் தரவில்லை.
செய்தித்தாள்களில் வரும் விஷயங்கள் தொடர்பாக விவாதிக்க முடியாது. தற்போது அதுகுறித்து இங்கு விவாதிக்க அனுமதிக்க முடியாது. இந்த விவகாரம் ஆய்வில் உள்ளது, முறையான ஆதாரம் இருந்தால் அனுமதி கொடுக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.
அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்ற முழக்கத்தை எழுப்பி சட்டப்பேரவை வளாகத்தில் திமுகவினர் போராட்டம் நடத்தினர்.