

'போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்!' என்ற வியாக்கியானத்தின் மூலம் மறுபடியும் அரசியல் சரவெடியை விநோதமாக கொளுத்திப் போட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். அரசியல் தலைவர்கள் பலவும் பலவிதமாக இதை குறித்து விமர்சனங்கள் உதிர்த்துக் கொண்டிருக்க, சராசரி மக்கள், 'என்ன சொல்ல வருகிறார் இவர். புரியலையே. மறுபடியும் குழப்புகிறாரே. இவர் எப்படி தமிழ்நாட்டு அரசியலுக்கு சரியாக வருவார்?' என்றெல்லாம் புலம்புவதை காணமுடிகிறது.
'ஜேம்ஸ் ஃபாண்ட்' டாக, 'ராபின் ஹூட்' டாக எளிய மொழியில் எளிய ரசிகனுக்காக பேசும் ரஜினி அரசியல் என்று வந்துவிட்டால் மட்டும் தமிழக நாட்டுப்புற மக்களுக்கு மட்டுமல்ல; கொஞ்சம் அரசியல் விஷயம் தெரிந்தவர்களுக்கு கூட புரியாத வண்ணம் பேசுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.
அவர் புரியாமல் வார்த்தைகளை உதிர்க்கிறாரா? புரிந்தேதான் வார்த்தைகளை விடுகிறாரா? தானும் குழப்பி மற்றவரையும் குழப்புகிறாரா? என்று அவரின் எதிர் நிலையாளர்கள் தொடர்ந்து கணைகளை வீசி வருகிறார்கள். இதைப் புரிந்து கொள்ள ரஜினியை சினிமா நடிகரிலிருந்து யதார்த்த நிலைக்குப் பார்க்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
சினிமா நடிகர் ரஜினியைப் பொறுத்தவரை அந்தக்கால இரும்புக்கை மாயாவி போன்று சிறார் முதல் பெரியவர் வரை கிளுகிளுப்பு மூட்டுபவர்தான். அதே கண்ணோட்டத்திலானவர் அல்லர் யதார்த்த வாழ்வியல் ரஜினி என்பதை அவரை உற்றுக் கவனித்து வருபவர்களுக்கு புரியும். 'மூன்று முடிச்சு' போன்ற ஆரம்ப காலப் படங்களிலிருந்து, 'பத்த வச்சுட்டியே பரட்டை!' என வசனம் பொழியும் 'பதினாறு வயதினிலே', 'தில்லுமுல்லு' ஆகிய திரைப்படங்கள் நடுவாக அவர் படங்கள் நடித்தது துள்ளித் திரிந்த காலம் என்பது யாவரும் அறிந்ததே.
அதன்பிறகு லதாவுக்கு கணவராகி, குடும்பத்தன்மைக்கு மாறி, இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகி, சங்கடமான சமயங்களில் இமயமலைக்கு சென்று விடும் சித்தர் நிலைக்கு தாவிப் பார்த்தால் அவரின் மாறி வரும் யதார்த்தம் புரிபடும். இந்த காலகட்டங்களில் அவரை ஈர்த்த மாமனிதர்கள் என்று பார்த்தால் ரஜினீஷ் தொடங்கி ராகவேந்திரா, தயானந்த சரஸ்வதி, சச்சிதானந்தா சாமியார் வரை கோலம் வரைந்து கொண்டே போகலாம். அவரை தங்களுக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் அவருடைய 100-வது படமான 'ராகவேந்திரா'வையே எடுத்தியம்புவதை கேட்கலாம்.
ஆக, அவர் தன் ரசிகர்களின் ரசிப்பு நிலையை கொடுத்து விட்டு, தனக்கு சித்த நிலையை தேடுகிறார் என்றே கொள்ளலாம். இதுதான் சினிமா ரஜினிக்கும், யதார்த்த ரஜினிக்குமான வேறுபாடு. இந்த இரண்டும் கலந்த கலவையாக அல்லாமல் சித்த ரஜினியாகவே அரசியலில் செயல்படுகிறார் என்றே அவர் செயல்பாடுகளை வைத்து யூகிக்க முடிகிறது.
எப்படி? இந்த இடத்தில், 'அடக்கி வைக்கப்பட்ட ஆசை எவ்வளவு ஆபத்தானது?' என்று ரஜனீஷ் (ஓஷோ) சொல்லி இருப்பது ஞாபகத்துக்கு வருகிறது.
அடக்கி வைக்கப்பட்ட ஆசை மட்டுமல்ல; அடக்கி வைக்கப்பட்ட அரசியல்; ஏங்க வைக்கப்பட்ட எதிர்பார்ப்பு எல்லாமே வீரியமானது. அதை மற்றவர்கள் உணர்ந்திருக்கிறார்களோ இல்லையோ சித்தர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதைத்தான் அவர்கள் ஒவ்வொரு முறையும் பரிசோதனை முயற்சியாக செய்து பார்த்திருக்கிறார்கள். அந்த அடக்கி வைக்கப்படுதலை கட்டிக் காப்பாற்ற நெடுங் காலங்களை அது சம்பந்தப்பட்ட வெளிப்பாடு இல்லாமலே கடத்தியிருக்கிறார்கள்.
அதே நிலைதான் ரஜினியின் அரசியல் வெளிப்பாடு நிலையிலும் உள்ளது என்றே கொள்ளலாம். அவருக்கு அரசியலில் ஆசை இல்லை என்றால் அவர்தான் சூப்பர் ஸ்டாராக அடையாளப்படுத்தப்பட்ட சினிமாவில் அதை எதிர்மறையாக ஏன் வெளிப்படுத்த வேண்டும்.
எதிர்மறை அரசியல் என்றால்? சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த முன்னோடி எம்ஜிஆரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எப்போது அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்தாரோ அப்போதிருந்தே திமுகவாக, தான் தோற்றுவித்த அதிமுகவாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள தயங்கியதேயில்லை.
இன்னும் சொல்லப் போனால் அந்த ஆகப் பெரிய மீடியாவை தன் அரசியல் பிரச்சார பீரங்கியாகவே பயன்படுத்தினார். அதே சமகால நடிகர் திலகமான சிவாஜி கணேசன் குணசேகரனாக, ரங்கதுரையாக, கட்டபொம்மானாக நடித்தால் அந்த பாத்திரமாகவே மாறிப் போவார். அதில் சிவாஜி கணேசன் மறைந்து போய்விடுவார்.
ஆனால் எம்ஜிஆர் அப்படியல்லர். மீனவ நண்பனாக, விவசாயியாக, நாடோடி மன்னனாக, மதுரை மீட்ட சுந்தரபாண்டியனாக என வரும் அத்தனை பாத்திரங்களிலும் லட்சிய நோக்குள்ள எம்ஜிஆராகவே பரிணமிப்பார். எம்ஜிஆர் என்கிற அந்த லட்சிய நோக்கு இளைஞர் வெல்ல முடியாத விஷயமே கிடையாது என்பதை தத்ரூபமாக வரைந்து விடுவார். அதற்குள்ளேயே தன் அரசியல் நிலையை புகுத்துவார். பாடல்களையும் அதற்கேற்ப தத்துவார்த்தமாக ஊடாட விடுவார். இப்படியான படிப்படியாக அரசியலில் முன்னேறியே 1977-ல் ஆட்சியை பிடித்தார்.
அந்த காலகட்டத்தில் வந்த 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் பெரிய ஃபிளாப் என்பது ஊரறிந்த ரகசியம். அதற்கு முந்தைய படங்கள் கூட பெரிய அளவில் வசூலைத் தரவில்லை. குணச்சித்திர பாத்திரமாகவே மாறிப்போன சிவாஜிகணேசன் நடிப்பு ரீதியாக மக்களிடம் வென்றும், அரசியல் ரீதியாக மக்களிடம் தோற்றதும், எம்ஜிஆர், எம்ஜிஆராகவே சினிமாவில் நின்று அரசியலிலும் மக்களிடம் வென்றதும் இப்படித்தான். அவருக்குப் பிறகு வந்த நடிகர்கள் எல்லாம் அரசியலில் எம்ஜிஆர் பாணியையே பின்பற்றினார்கள்.
பாக்யராஜ், சத்யராஜ் போன்றவர்கள் எம்ஜிஆர் போலவே வேஷம் கட்டினார்கள். என் சினிமா வாரிசு என்று பாக்யராஜூக்கு எம்ஜிஆர் மேடையில் போகிற போக்கில் பட்டம் கொடுத்தார். ஆனால், அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் சிறப்பாக அமையவில்லை.
ஆனால் ஜெயலலிதா மட்டும் எம்ஜிஆராக ஜெயித்ததற்கு காரணங்கள் பல உண்டு. அதில் முக்கியமானது அவருக்கு எம்ஜிஆரால் அளிக்கப்பட்ட செங்கோல், கொள்கை பரப்பு செயலாளர் பதவி, ராஜ்ய சபா எம்பி பதவி, அதையெல்லாம் விட அவர் எம்ஜிஆரை விடவும் அரசியல் புரிந்து இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி வரை செய்து கொண்ட மறைமுக அரசியல் ஆற்றல்கள்.
மற்ற நடிகர்களில் எல்லாம் கொஞ்சம் விதிவிலக்காக விஜயகாந்த் கள உழைப்பு நிறைய கண்டார். 20 ஆண்டுகாலம் தனித்து உழைத்து தமிழகத்தின் கிராமங்கள் தோறும் தனக்கென ரசிகர் மன்றங்களை உருவாக்கினார். அந்த லட்சோப லட்சம் ரசிகர்களை வைத்துத்தான் இறுதியில் கட்சியை அறிவித்தார். ஆனால் அதில் அவரின் குடும்ப உறுப்பினர்களே கோலோச்சினர். அதை விட அவர் எம்ஜிஆரின் பாணியையே பின்பற்றினார்.
அந்த எம்ஜிஆர் பாணி ஏற்கெனவே ஆட்சியில் இருந்த அச்சு அசலான எம்ஜிஆராக பரிணமித்த ஜெயலலிதாவின் அரசியல் முன்பு தோற்றது என்பதுதான் உண்மை. எம்ஜிஆர் மறைந்த பின்பு எம்ஜிஆராகவே தன்னை உருமாற்றம் செய்து கொண்ட நடிக சக்தி ஜெயலலிதா மட்டுமே எம்ஜிஆராக சுடர் விட முடிந்தது. அதுவும் எம்ஜிஆர் கண்ட கட்சி, எம்ஜிஆர் கொண்ட சின்னம் இரட்டை இலையை வைத்தே அவரின் ஆதர்ச சக்தி அத்தனை தூரம் பயணம் செய்தது.
ரஜினி நடிகர்தான். ஆன்மீக வாதிதான். ஆனால் எம்ஜிஆர் போல் மூகாம்பிகை கோயிலுக்குப் போய் தங்கவேல் சாற்றும் சாதாரண பக்தர் அல்லர். ஜெயலலிதாவைப் போல் குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று யானை தானம் கொடுப்பவரும் அல்லர். சங்கடமாக இருந்தாலோ, மனசுக்கு சுகமில்லாமல் இருக்கும்போதோ இமயமலை சென்று செல்பவர். அங்கே பல ஞானிகளை சந்தித்து சாமியாரோடு, சாமியாராக வாழவும் தலைப்பட்டவர். கல்லையறிவது வேறு. தன்னையே அறிந்து கொள்வது வேறு என உணர்ந்து வருபவர்.
எனவேதான் ஆயிரம் விமர்சனக் கணைகள் வந்தபோதும் அதற்கு பதிலேதும் சொல்லாமல் சிரித்துக் கொண்டே போகிறவராக தெரிந்தார். அவரின் அரசியல் பிரவேசம் 'பாட்ஷா' வெற்றியடைந்த வேளை திமுக-தமாகா கூட்டணிக்கு வாய்ஸ் கொடுப்பதில் தொடங்கியது. அந்த நேரத்தில் அவர் கட்சி ஆரம்பித்திருந்தால் ஆட்சியைப் பிடித்திருப்பார் என்பது வெற்று வாதம் என்பதை உணர்ந்தே இருந்தார். எனவேதான் வாய்ஸ் மட்டும் விட்டுப் பார்த்தார்.
எதிர்பார்த்தபடியே அவர் வாய்ஸ் கொடுத்த கட்சிகள் வென்றன. அதை அவர் வென்றது போல் பறை சாற்றின ஊடகங்கள். அதையும் அவர் புரிந்தே வைத்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அப்போது அவர் கட்சி ஆரம்பித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?
அப்போது ஜெயலலிதா எம்ஜிஆருக்கு நிகராக சுடர்விட்டுக் கொண்டிருந்தார். ஆட்சியதிகாரத்தில் தவறுகள் பல செய்திருந்தாலும், அவருக்கான முதலாளிகள் ஆதரவு, அதிகார வர்க்கங்களின் ஆதரவு நிறைந்தே இருந்தது.
அதையடுத்து கருணாநிதி. அவர் ஏற்கெனவே 3 முறை தமிழகத்தை ஆண்டவர். அந்த ரீதியில் பணபலம், அதிகாரபலம், முதலாளிகளிடம் செல்வாக்கு பெற்றே இருந்தார். இப்படி 2 மாபெரும் சக்திகளில் ஒன்றைத்தான் அந்த செல்வாக்குகள் ஆதரிக்குமே ஒழிய 3-வதாக வரும் ரஜினியை முன்பே பல்வேறு அரசியல் சக்திகளினால் சேகரிக்கப்பட்ட செல்வாக்குகள் ஆதரித்து விடுமா என்ன? எனவேதான் அந்த காலகட்டத்தில் நேரடி அரசியலை தவிர்த்தார் ரஜினி.
ஆனால் தனக்கு கிடைத்த 1996 அரசியல் பலா பலனை எந்த இடத்திலும் விடத் தயாராக இல்லை. தன் அடுத்த படங்களில் எல்லாம் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்பது போலவும், ரசிகர்கள், தாய்மார்கள் தங்களைக் காப்பாற்ற அரசியலுக்கு நீங்கள் வரவேண்டும் என்பது போன்ற உத்திகளை கொண்ட காட்சிகளை அமைப்பது என்பது வாடிக்கையாகிப் போனது.
அரசியலை நேரடியாக சினிமாவில் புகுத்தின ரகம் எம்ஜிஆர் என்றால் அரசியலே வேண்டாம் என்று ஓடுகிற ரகம் போல் தன் படங்களில் நடித்தார் ரஜினி. இதைத் திட்டம் போட்டு நடித்தாரா? அவருக்குள் இருந்த சித்தர் தன்மையுள்ள ஆற்றல் அவரை அப்படி இயக்குவித்ததா என்பதெல்லாம் அவருக்கே வெளிச்சம் என்றானாலும் கூட, இது ஒரு வகை அரசியல் ஏக்கத்தை தமிழக மக்களிடம், குறிப்பாக ரஜினி ரசிகர்களிடம் ஏற்படுத்தியே வந்திருக்கிறது.
ரஜனீஷ் சொன்னதுபோல அடக்கி வைக்கப்பட்ட ஆசை என்பது போல, அடக்கி வைக்கப்பட்ட அரசியல் ஆசை என்றே இதை கொள்ளலாம். எந்த ஆசையானாலும் எந்த இடத்தில் பீறிட வேண்டுமோ, அப்போது பிறீட்டால் மட்டுமே அது அடக்கி வைக்கப்பட்டதற்கான அடையாளத்தையும், நோக்கத்தையும் அடையும். இல்லாவிட்டால் அது சேதமாகும்.
'கண்ணா, நான் நிச்சயம் வருவேன். ஆனா எப்ப வருவேன். எப்படி வருவேன். எங்கே வருவேன்னு எனக்கே தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் வரவேண்டிய இடத்தில் கரெக்டா வந்துடுவேன்!' என்ற ரஜினியின் ஒரு படத்தின் வசனம்தான் இந்த இடத்திலும் ஞாபகத்துக்கு வருகிறது.
திமுகவிலிருந்து எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கவே கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் தேவைப்பட்டது. அப்போதும் கூட திமுக எதிர்க்கட்சி அந்தஸ்தில் 47 எம்எல்ஏக்கள் கொண்டதாக இருந்தது. அந்த அளவுக்கு எம்ஜிஆரின் 'மக்கள் மாஸ்'-ஐ விஞ்சிய ஆற்றல் மிகுந்தவராகவே இருந்தார் கருணாநிதி. அதுபோன்ற இருவேறு ஆற்றலுடன் மாபெரும் சக்திகளான ஜெயலலிதாவும், கருணாநிதியும் இயங்கும் நிலையே கடந்த ஆண்டு நவம்பர் வரை தமிழக அரசியலின் நிலையாக இருந்தது.
அந்த 2 சக்திகளுக்கிடையே அரசியல் கட்சி ஆரம்பித்து, செலவுகளை சமாளித்து, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கொள்வது என்ன சாத்தியமா? என்ற கேள்விக்கான புரிதல் ரஜினியிடம் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். அதை சோ முதல் சிதம்பரம், சுப்பிரமணியசாமி வரையிலான அவரது அரசியல் நண்பர்களுடன் கலந்து பேசிப் பேசி முடிவுகளை தன்னிச்சையாகவே அவர் எடுத்திருக்க வேண்டும்.
இப்போது தமிழகத்தின் 2 சக்திகளில் ஒருவர் இல்லை. இன்னொருவர் செயல்பட முடியாத நிலை. இப்போது ரஜினி அரசியலுக்கு வர தடையேதும் இல்லை.
இப்போதுள்ள மக்கள் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவருக்கான வெற்றிடத்தில், தன்னால் அடக்கி வைக்கப்பட்ட அரசியல் ஆசை ரசிகர்களிடம் பீறிட்டு எழுகிறதா? அது எந்த அளவு பீறிட்டு உயரே செல்கிறது? மக்களிடம் எந்த மாதிரியான ரியாக்ஷன் இருக்கிறது என்பதை தற்போது நேரடியாகவே அம்பு விட்டுப்பார்க்கிறார் ரஜினி. 'போர்' என்கிறார். 'புத்தர்' கதை சொல்லுகிறார்.
ஆனால் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள், முதல் போட்டு முதல் எடுப்பவர்கள், பதவிக்காக எந்த பதவியையும் இழக்கத் தயாராக இருப்பவர்கள் எல்லாம் ரஜினிக்காக காத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு சேர்ந்த கூட்டத்தைப் போல ரஜினிக்கும் தானா சேர்ந்த கூட்டம் உள்ளது.
இந்த சூழலில் கத்தி மீது நடப்பது போன்ற ஆபத்தான பாதையில் ரஜினி கவனமாகப் பயணிக்க வேண்டிய தருணம் இது என்பதும், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதே ரசிகர்கள், மக்களின் விருப்பமாக இருப்பதையும் மறுப்பதற்கில்லை. ரஜினி வரட்டும். வருவார். அவர் இப்போதும் வராவிட்டால் இனியொரு சந்தர்ப்பம் இல்லை. அவர் சினிமாவில் 20 ஆண்டு காலமாக பேசிய எதிர்மறை அரசியலுக்கும் அர்த்தமில்லை என்றாகி விடும்.