Published : 05 Apr 2014 10:23 AM
Last Updated : 05 Apr 2014 10:23 AM

தி இந்து வழிகாட்டி நிகழ்ச்சி, கல்விக் கண்காட்சி: ஏராளமான மாணவ, மாணவிகள் குவிந்தனர்

உயர்கல்வி குறித்து நடத்தப்பட்ட ‘தி இந்து’ வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ் சார்பில் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக் கண்காட்சி, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம், பாரத் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம், டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கஸ்தூரி அண்ட் சன்ஸ் சேர்மன் என்.ராம், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் நிறுவனத் தலைவர் டி.வி.மோகன்தாஸ் பை ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் மோகன்தாஸ் பை பேசும்போது, ‘‘அடுத்த 20 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தையில் கடும் போட்டி இருக்கும். எனவே, மாணவர்கள் பல்வேறு திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். எதிர்கால சவால்களை சந்திக்கும் வகையில் கல்வி அமைந்திருக்க வேண்டும். எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வம், பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திறன், பரந்த புத்தக வாசிப்பு, விசால அறிவு, முதுகலை அல்லது ஆராய்ச்சி பட்டம், ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் திறன், தொழில்நுட்ப அறிவு போன்றவற்றின் மூலம் வேலைவாய்ப்பு சவால்களை எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.

பின்னர் மேற்படிப்பு தொடர்பாக மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். முன்னதாக, கஸ்தூரி அண்ட் சன்ஸ் சேர்மன் என்.ராம் வரவேற்றுப் பேசும்போது கூறியதாவது:

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி என்று வரும்போது, என்ன படிக்கலாம்? எந்த பாடப்பிரிவை தேர்வு செய்யலாம்? எங்கு படிக்கலாம் என குழம்பி விடுகின்றனர். பெற்றோருக்கும் இதே நிலைதான். தமிழகத்தில் 750-க்கும் மேற்பட்ட தொழிற்கல்லூரிகள் உள்ளன. அனைவருமே தரமான கல்வியை தேடுகின்றனர். உண்மையிலேயே இது ஒரு சவால்தான். இத்தகைய சூழலில் மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இந்த வழிகாட்டி நிகழ்ச்சி பெரும் வரப்பிரசாதமாக அமையும். தரமான உயர்கல்வி அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது அவசியம். இவ்வாறு என்.ராம் கூறினார்.

சந்தேகங்களுக்கு விளக்கம்

மருத்துவ துறை வேலைவாய்ப்புகள் குறித்து ‘சைமெட்’ நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் ராமச்சந்திரனும், பொறியியல் வேலைவாய்ப்புகள் பற்றி கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தியும் பேசினர். பிற்பகல் நடந்த அமர்வில், புதிய ஐ.ஐ.டி. நிறுவனங்கள், பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் டேவிட் கோயில்பிள்ளை, அசோக் ஆகியோர் உரையாற்றினர்.

கல்விக் கண்காட்சியை ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக்கண்காட்சி இன்றும் (சனிக்கிழமை) நடக்கிறது.

கல்வியை தாராளமயமாக்கத் தவறிவிட்டோம்: ஜி.விசுவநாதன் பேச்சு

பொருளாதாரத்தை தாராளமயமாக்கிய நாம், கல்வியை தாராளமயமாக்கத் தவறிவிட்டோம் என்று வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

‘தி இந்து’ எஜுகேஷன் பிளஸ், வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகம் சார்பில் உயர்கல்வி-வேலை வழிகாட்சி நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. தொடக்க விழாவுக்கு தலைமை தாங்கி வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசிய தாவது:

பண்டைய காலத்தில் உலக பொருளாதாரத்தில் 33 சதவீதமாக இருந்த இந்தியாவின் பங்கு, இன்று வெறும் 2 சதவீதமாக குறைந்துவிட்டது. அறிவுசார்ந்த பொருளாதாரத்துக்கு அடிப்படைத் தேவை, கல்வி குறிப்பாக உயர்கல்வி. 2011-ம் ஆண்டு கணக்கின்படி, இந்தியாவில் 14 கோடி இளைஞர்களில் 2.25 கோடி பேர் மட்டுமே உயர்கல்விக்கு சென்றுள்ளனர்.

இதேபோல தமிழகத்தில் 77 லட்சம் பேர் பள்ளிப் படிப்பை முடித்தாலும் 17.5 லட்சம் பேர் மட்டுமே உயர்கல்வி பயில முடிகிறது. மற்றவர்களால் மேற்படிப்பை தொடர இயலவில்லை. பள்ளிப் படிப்பை முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி கொடுத்தாக வேண்டும்.

எங்கே பிரச்சினை?

நம் நாட்டில் பள்ளிக் கல்வியில் 29 வகையான மாநில பாடத் திட்டங்களும், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமும் நடைமுறையில் உள்ளன. அனைத்து பாடத்திட்டங்களையும் ஒரே மாதிரியாக மாற்றுவது குறித்து நாம் ஒருபோதும் விவாதித்தது இல்லை. மாநில பாடத்திட்டங்களை காட்டிலும் சி.பி.எஸ்.சி. பாடத்திட்டம் தரமாக உள்ளது.

மாணவ, மாணவிகள் நன்றாக படிக்கின்றனர். பிள்ளைகளின் படிப்புக்காக தியாகம் செய்யக்கூடிய பெற்றோர்கள் உள்ளனர். அப்படியென்றால் உயர்கல்வித்துறையில் பிரச்சினை எங்கே உள்ளது? கல்வி முறையிலும், அரசு நிர்வாகத்திலும்தான் பிரச்சினை. உயர் கல்வி நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படுவது இல்லை.

தாமதமாகும் தன்னாட்சி அந்தஸ்து

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.), பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.), மாநில அரசு என ஏராளமான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்புகள் உள்ளன. 1991-ம் ஆண்டு பொருளாதார கொள்கை யில் லட்சுமியை (செல்வம்) தாராள மயமாக்கிய நாம், சரஸ்வதியை (கல்வி) தாராளமயமாக்கத் தவறிவிட்டோம்.இவ்வாறு விசுவநாதன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x