

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு பதிலாக சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் என்ற புதிய அமைப்பை (National Commission for Socially and Educationally Backward Classes - NCSEBC) உருவாக்கி அதற்கு அரசியல்சட்ட அங்கீகாரம் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க, பாராட்டுக்குரிய முடிவாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் அறிக்கையில் மேலும் கூறியதாவது:
தில்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்க வசதியாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 338(பி) என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும். அதுமட்டுமின்றி சமூக மற்றும் கல்விரீதியாக பின்தங்கியவர்கள் யார்? என்பதை வரையறுப்பதற்காக அரசியலமைப்பு சட்டத்தின் 366&ஆவது பிரிவில் 26(சி) என்ற புதிய பிரிவு சேர்க்கப்படும். இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிய சாதியினரை சேர்ப்பதும், நீக்குவதும் இதுவரை அரசாணைகள் மூலம் செய்யப்பட்டு வந்த நிலையில், இனி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு தான் இத்தகைய திருத்தங்களை மேற்கொள்ள முடியும். புதிய அமைப்புக்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கும் என்பதால் இதற்கான மசோதாக்கள் சிக்கலின்றி நிறைவேற்றப்பட்டுவிடும்.
1993&ஆம் ஆண்டில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்ட நாளில் இருந்தே அதற்கு அரசியலமைப்புச் சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. 24.10.2008 அன்று மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் பா.ம.க., தி.மு.க, காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தெலுங்குதேசம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கியக் குழு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீலை சந்தித்து அளித்த மனுவில், 2011&ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை சாதிவாரிக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்; பிற பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளுடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு உடனடியாக அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கைகளில் இதுதொடர்பான வாக்குறுதி தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தது. 2016&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிக்கையிலும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு வலியுறுத்தும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் மத்திய அமைச்சரவை எடுத்துள்ள இந்த முடிவு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவுக்கு நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே செயல்வடிவம் கொடுக்கப்பட வேண்டும். அப்போது தான் இம்மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும் மகிழ்ச்சியாக மாறும்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் வழங்கப்படாததால், பிற பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்கள் பல வகைகளில் காவு கொடுக்கப்பட்டன. அம்மக்களின் நலன்களை பாதுகாக்கும் நோக்குடன் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைகளை வழங்கினாலும் அதற்கு அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் இல்லை என்பதால், அப்பரிந்துரைகள் குப்பையில் வீசப்படும். உதாரணமாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பில் 27% இடஒதுக்கீடு வழங்கி 27 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், 2015ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி நிலவரப்படி 12 விழுக்காடு வேலைவாய்ப்புகள் மட்டும் தான் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைத்திருக்கிறது. மற்ற வாய்ப்புகள் அமைத்தும் இல்லாத கிரீமிலேயரை இருப்பதாகக் கூறி பறிக்கப்பட்டன என்பது தான் உண்மையாகும்.
அதேபோல், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருகிறது. தனியார் துறை இட ஒதுக்கீடு, உயர்நீதித்துறை இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்துப் பிரிவினருக்கும் உரிய இடஒதுக்கீடு வழங்குதல் உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த முக்கிய கோரிக்கைகள் நீண்டகாலமாக மத்திய ஆட்சியாளர்களால் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்தன. ஆனால், இப்போது உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்ட அங்கீகாரம் பெற்ற சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம் இதுதொடர்பாக அனைத்து ஆதாரங்களுடன் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கும்போது அதை மத்திய அரசால் மறுத்து ஒதுக்கிவிட முடியாது. அந்த வகையில் இது சமூகநீதி தழைக்க உதவியாக இருக்கும்.
சமூக மற்றும் கல்விரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தை உருவாக்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, அத்துடன் நிறுத்திவிடாமல் அந்த ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்களையும் வழங்கி அதன்மூலம் சமூகநீதியை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.