Published : 16 Jan 2014 11:50 AM
Last Updated : 16 Jan 2014 11:50 AM

ரயிலில் ஜெர்மன் பெண்ணிடம் தவறாக நடந்த இளைஞர் கைது- முகவரியை தேடிப் பிடித்து மடக்கிய போலீஸார்

மங்களூரில் இருந்து சென்னை வந்த வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெர்மன் பெண்ணிடம் தவறாக நடந்த பிஹார் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஜெஸி (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). கர்நாடக மாநிலம் உடுப்பியில் தொண்டு நிறுவனம் சார்பில் செயல் படும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சென்னை யில் உள்ள தோழியைப் பார்ப்ப தற்காக வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ் பிரஸ் ரயிலில் கடந்த 10-ம் தேதி சென்னை புறப்பட்டார் ஜெஸி.

தூங்கும் வசதி கொண்ட 2-ம் வகுப்பு பெட்டியில் அவர் முன் பதிவு செய்திருந்தார். ஆனால், டிக்கெட் உறுதி செய்யப்படாத தால், உட்கார்ந்து பயணம் செய்வதற்கான (ஆர்.ஏ.சி.) சீட் கிடைத்தது. இவருக்கு எதிரில் பிஹாரைச் சேர்ந்த சந்தன்குமார் (22) என்ற இளைஞருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரவு 10.30 மணிக்கு பிறகு இரண்டு இருக்கைகளையும் ஒன்றாக்கி ஒரே படுக்கையை ஜெஸியும், சந்தன்குமாரும் பகிர்ந்து கொண்டு தூங்கினர். அப்போது ஜெஸியிடம் சந்தன்குமார் தவறாக நடந்திருக்கிறார்.

சத்தம் போட்டால் சந்தன்குமார் தப்பிவிடுவார் என நினைத்த ஜெஸி, ரயிலில் அமைதியாக இருந்தார். சென்னை வந்து இறங்கியதும் நடந்த சம்பவங்கள் குறித்து டெல்லியில் உள்ள ஜெர்மன் தூதரகத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சென்னை தூதரகத்தை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். திங்கள்கிழமை இரவில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஜெர்மன் தூதரக அதிகாரிகளுடன் வந்து புகார் கொடுத்தார் ஜெஸி. அதைத் தொடர்ந்து ரயில்வே போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில், சென்ட்ரல் ரயில்வே போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

சந்தன்குமார் பயணம் செய்த டிக்கெட்டை வைத்து அவரது முகவரியையும், செல்போன் எண்ணையும் கண்டுபிடித்தனர். சென்னை போரூர் அருகே கோவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தன்குமார், அதன் அருகிலேயே அறை எடுத்து தங்கியிருந்தார். அவரை செவ்வாய்க்கிழமை மாலை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவசர உதவிக்கு 99625 00500

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். படுகாயமடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் உயிரிழந்தார். அந்த மாணவி நிர்பயா என்றே அழைக்கப்படுகிறார். ெபண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டத்துக்கும் நிர்பயா சட்டம் என்று பெயரிடப்பட்டது. இப்போது வடக்கு-மத்திய ரயில்வே நிர்வாகம், ரயில் பயணத்தின் போது பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானால் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொள்ளும் வகையில் ரயில்வே காவல் கட்டுப்பாட்டு அறை எண்கள் அடங்கிய ‘நிர்பயா அட்டை’யை வழங்கி வருகிறது. ஏ.டி.எம். கார்டு அளவில் இந்த அட்டை இருக்கிறது.

இதுகுறித்து சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் ஆய்வாளர் சேகரிடம் கேட்டபோது, ‘‘நிர்பயா அட்டைபோல தமிழகத்திலும் ரயில் பயணிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன. அனைத்து பெட்டிகளிலும் அவசர உதவிக்கான தொலைபேசி எண்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போதே அந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அடுத்த ரயில் நிறுத்தத்திலேயே அவர்களுக்கு போலீஸ் உதவி கிடைக்கும்’’ என்றார்.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் திருட்டு, சண்டை, பெண்களிடம் தவறாக நடத்தல் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் 99625 00500 என்ற அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். இந்த எண் பயண டிக்கெட்டிலும் அனைத்து ரயில் பெட்டியிலும் ஒட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x