

எழிலகத்தில் இருந்த அரசு வாகனங்களைக் கடத்திச் சென்று விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள எழிலகம் வளாகத்தில் போக்குவரத்து, வேளாண்மை, பொதுப்பணி உள்பட பல்வேறு அரசுத் துறைகளின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு இந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் நலத்துறைக்கு சொந்தமான ஜீப் மற்றும் சமூக நலத்துறையின் டெம்போ டிராவலர் வாகனங்கள் காணாமல் போயின. இதுகுறித்து அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தலைமையிலான தனிப் படைபோலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். வெள்ளிக்கிழமை இரவில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, புதுப்பேட்டையில் வாகனங்களை உடைத்து உதிரி பாகங்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, புதுப்பேட்டை யைச் சேர்ந்த பாபு என்ற இந்தா முல்லாவை (40) போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது, அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த ராம்குமார் (38), எல்.பி. ரோட்டைச் சேர்ந்த அருள்மணி (34), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்த வேலு (39) என்ற ஆதிவேலு ஆகியோருக்கு வாகன கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, 4 பேரையும் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். கைதான ஊத்தங்கரை ஆதிவேலு, அந்தப் பகுதியின் முன்னாள் கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.