Published : 26 Mar 2017 04:48 PM
Last Updated : 26 Mar 2017 04:48 PM

மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர மத்திய அரசின் மெத்தனப் போக்கே காரணம்: வாசன்

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்வதற்கு மத்திய பாஜக அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரே நாள் இரவில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அதாவது வங்கக்கடலில் மின்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டப் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் மற்றும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 8 பேர் என மொத்தம் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்று, சிறையில் அடைத்துள்ளனர். மேலும் மீனவர்களின் 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றைய தினம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள், பாட்டில்களை வீசி விரட்டியடித்தனர். இதனால் தமிழக மீனவர்கள் சிலர் காயமடைந்து, அச்சத்தோடு கரை திரும்பினர். இலங்கை கடற்படையின் இந்த அராஜகச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பியதால் ஒரு படகுக்கு குறைந்த பட்சம் 15 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 5-ம் தேதி இந்திய - இலங்கை நாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தையில் "மீனவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தக் கூடாது" என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அதனைத் தொடர்ந்தும் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், படகுகளை பறிமுதல் செய்வதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

மேலும் இந்த மாதம் முதல் வாரத்தில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதும் நடந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக மீனவப் பிரதிநிதிகள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்திய பிறகும் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டேபோகிறது. இதற்கெல்லாம் காரணம் மத்திய பாஜக அரசின் மெத்தனப்போக்கே.

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இதுவரையில் மத்திய அரசு எந்தவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்தது கிடையாது. எனவே மத்திய பாஜக அரசு உடனடியாக இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு, தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை கடற்படையின் அட்டூழியம் இனியும் தொடரக்கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

மேலும் இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதோடு, அங்குள்ள தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தையும் ஒப்படைக்கவும் மத்திய அரசு - இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x