Published : 02 Oct 2014 11:26 AM
Last Updated : 02 Oct 2014 11:26 AM

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் எண்ணிக்கை 376 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கையை 355-லிருந்து 376 ஆக உயர்த்தி மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனுமதி அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் 4,700-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணிபுரிகிறார்கள். ஐஏஎஸ் பணியானது அகில இந்திய பணியாக கருதப்படுகிறது. காரணம், ஐஏஎஸ் அதிகாரிகள் குறிப்பிட்ட மாநிலத்தில் பணியாற்றினாலும் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள்.

ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஐஏஎஸ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த எண்ணிக்கை திருத்தியமைக்கப்படும். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை 355 ஆக இருந்தது. இதில், 247 இடங்கள் நேரடி நியமனத்துக்கு உரியவை. 108 இடங்கள் (33 சதவீதம்) பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் இடங்கள்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை

பதவி உயர்வைப் பொருத்தவரையில், 85 சதவீத இடங்கள் மாவட்ட வருவாய் அதிகாரிகள் (டிஆர்ஓ) மூலமாக நிரப்பப்படும். எஞ்சிய 15 சதவீத இடங்கள் வருவாய்த்துறை அல்லாத பிரிவின் (நான்-ரெவின்யூ) கீழ் கல்வித்துறை, பதிவுத்துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட இதர துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி நிரப்பப்படும். இந்த முறை, ‘செலக்சன்’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டதாலும், கடந்த ஆண்டு ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கையை 13 சதவீதம் அளவுக்கு உயர்த்தி தருமாறு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறைக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.

376 ஆக அதிகரிப்பு

இந்த நிலையில், ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கையை 355-லிருந்து 376 ஆக அதிகரித்து மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அனுமதி வழங்கியிருக்கிறது. இதில் 262 இடங்கள் நேரடி நியமனத்துக்காகவும், 114 இடங்கள் பதவி உயர்வு நியமனத்துக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஐஏஎஸ் பணியிடங்களின் எண்ணிக்கை கூடுதலாக 21 உயர்த்தப்பட்டிருப்பதால் 6 இடங்கள் பதவி உயர்வு நியமனத்துக்கு கிடைக்கும். அதில் 5 இடங்கள் வருவாய்த்துறை பிரிவுக்கும், ஓர் இடம் வருவாய்த்துறை அல்லாத பிரிவுக்கும் ஒதுக்கப்படலாம் என்று தமிழக அரசின் பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x