Published : 18 Apr 2017 06:56 PM
Last Updated : 18 Apr 2017 06:56 PM

பிரதமர் விவசாயிகளை சந்திக்க முதல்வர் கோரவில்லை: ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியாது - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து

புதுடெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. ஒரு மாநில முதல்வர் சந்திக்க வேண்டும் என்று கோரினால் பிரதமர் சந்திப்பார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு நேற்று வந்த அவர், பின்னர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரத் தேவையில்லை என்று கூறிய கருத்து உட்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அவர் கூறியதாவது:

ரஜினிக்கு அரசியல் பற்றி ஒன்றும் தெரியாது. சினிமா நடிகர்களுக்கு என்ன அரசியல் தெரியும்? அரசியலில் 20 ஆண்டுகள் இருந்தால்தான் அரசியல் புரியும். நேரடியாக வந்தால் ஒன்றும் புரியாது. ஓ.பி.எஸ் அணியும், சசிகலா அணியும் ஒன்று சேர்வதுபோல தெரியவில்லை. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் ஆதரவு இல்லை. அவர் தனி ஆள்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் காவிரிக்காக கண்காணிப்புக் குழுவை உருவாக்க வேண்டும் என்று ஒரு முக்கிய கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அக்குழுவை உருவாக்குவது பிரதமர் கையில் இல்லை. அது உச்ச நீதிமன்றத்தின் கையில்தான் உள்ளது. இங்கு நடைபெறும் தற்கொலை போன்ற பிரச்சினைகளுக்கு மாநில அரசுதான் பொறுப்பு. போராடி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்க வேண்டும் என மாநில முதலமைச்சர் கோரினால் சந்திப்பார். அதுபோன்ற ஒரு வேண்டுகோளை தமிழக முதல்வர் பிரதமரிடம் வைக்கவே இல்லை. ஆர்ப்பாட்டம் செய்தால் உடனடியாக பிரதமர் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது எந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது எனக்கு புரியவில்லை. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் பெற்றவர் தேர்தல் ஆணையத்தில் யாரிடம் கொடுக்க முயன்றார். அவரிடம் தினகரன் கொடுத்ததற்கான ஆதாரம் உள்ளதா என்பதை நிரூபிக்க முடியவில்லை.

சசிகலா கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிக்கு தனிப் பெரும்பாண்மை சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கும்போது தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக ஆட்சியை மத்திய அரசு தடுக்க பார்ப்பதாக கூறுவது சினிமா திரைக்கதை போன்ற கற்பனையாக உள்ளது. எங்களிடம் சட்டப்பேரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. எப்படி நாங்கள் தடுக்க முடியும். நான் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு அளிக்க அவரிடம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இல்லை. நான் சங்கர மடம் வந்து ஜெயேந்திரர், விஜயேந்திரரை சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அவர்களை சந்திப்பதற்காக மட்டுமே வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x