

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்து முடிவெடுக்கும் தனிப்பட்ட அதிகாரம் பேரவைத் தலைவருக்கே உள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரி, லோக் சத்தா கட்சியின் நிர்வாகி ஜெகதீஸ்வரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில், சட்டப்பேரவைச் செயலகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்று. ஆனால், அவைக்குறிப்புகள் உடனுக்குடன் இணையத்தில் வெளியிடப்படுகின்றன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவைக்குறிப்புகள் இணையத்தில் வெளியிடப்படுவதில்லை என மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, அவைக் குறிப்புக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி டீக்காராமன் ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மக்களவை, மாநிலங்களவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும்போது, சட்டப்பேரவை நிகழ்வுகளை மட்டும் ஏன் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது?’’ என கேள்வி எழுப்பினர்.
சட்டப்பேரவைச் செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி, ‘‘அவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து முடிவு எடுப்பது பேரவைத் தலைவரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது, அதில் மனுதாரர்கள் உரிமை கோர முடியாது’’ என்றார்.
அதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘சட்டப்பேரவை அவைக் குறிப்புகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அளிக்கப்பட்ட உத்தரவாதம் எந்த நிலையில் உள்ளது?’’ என கேட்டனர்.
இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய 4 வாரம் அவகா சம் வேண்டும் என அரசு தலை மை வழக்கறிஞர் கோரினார். அதை யடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரலுக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.