

டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தொடர்புடைய 2 வக்கீல்கள் புதன்கிழமை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். கொலையாளிகளை தேடி 4 தனிப்படைகள் பெங்களூருக்கு விரைந்துள்ளன.
இதுபற்றிய விவரம் வருமாறு:
துரைப்பாக்கம் குமரன் குடில் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சுப்பையா (58). சென்னை அரசு மருத்துவ கல்லூரியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். பின்னர் அபிராமபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். கடந்த 14 ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்ல காரில் ஏறுவதற்காக வந்த அவரை தடுத்து நிறுத்தி, 4 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மொத்தம் 27 இடங்களில் வெட்டு விழுந்திருந்தது. தீவிர சிகிச்சை பெற்று வந்தவர் 22ம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர்கள் பாசில், அவரது சகோதரர் போரீஸ் இருவரும் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் இருவரும் புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு சைதாப்பேட்டை பெருநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்களை அக்டோபர் 9ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டதை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் பெங்களூரில் பதுங்கி இருப்பதாக கோட்டூர்புரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்களை பிடிக்க 4 தனிப்படை போலீசார் பெங்களூர் விரைந்துள்ளனர்.
முன்னதாக இந்த கொலை வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் பாசிலை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்ய முயன்ற விவகாரத்தில் காவல் துறையினர் வழக்கறிஞர்கள் இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே வழக்கறிஞர் ஒருவரை கைது செய்ய போலீசார் முயன்றதை கண்டித்து உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தற்போது அவரே கொலை வழக்கில் சரணடைந்துள்ளது வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் சுப்பையாவை நோக்கி கொலையாளிகளில் ஒருவர் முதலில் வருவதையும், டாக்டர் அச்சத்துடன் பின் வாங்குவதையும், அடுத்தடுத்து கொலையாளிகள் சூழ்ந்து அவரை வெட்டிச் சாய்ப்பதையும்... எதிர் கட்டிடத்தில் இருந்து அச்சத்துடன் பார்க்கும் நேரடி சாட்சிகள். அதே கட்டிடத்தில் பதிவான பாதுகாப்பு கேமிராவின் பதிவில் இருந்து..!
டாக்டர் கொலைக் காட்சி கேமராவில் பதிவானது இப்படித்தான்!
டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்ட காட்சிகள் சம்பவம் நடந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகி உள்ளது. சென்னையில் அடுத்தடுத்து குற்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடந்ததை தொடர்ந்து, அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும்படி போலீஸார் கடந்த சில காலமாகவே அறிவுறுத்தி வருகின்றனர். அவ்வாறுதான் ஆர்.ஏ.புரத்தில் டாக்டர் பணிபுரிந்த தனியார் மருத்துவமனைக்கு எதிரே உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் கேமரா பொருத்தப்பட்டது. கட்டிடத்தின் நுழைவு வாயிலில் வந்து செல்வோரைக் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட கேமராவில்தான், சாலையின் எதிர்புறம் நடந்த படுகொலை பதிவாகி உள்ளது.
இது பற்றிய விவரம் வருமாறு:
மருத்துவமனைக்கு வெளியே 4 பேர் கொண்ட கும்பல் காத்திருக்கிறது. டாக்டர் வெளியே வருவதை பார்த்ததும் டீ சர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்திருக்கும் ஒருவன் சாலையில் சாதரணமாக நடந்து செல்வதை போல டாக்டரை நோட்டமிடுகிறான். டாக்டர் கார் அருகே வந்ததும் ஒருவன் மட்டும் அரிவாளை எடுத்து அவரை வெட்ட முயற்சிக்க டாக்டர் பயத்தில் காருக்கு பின்னால் ஓடுகிறார். காரின் பின்னால் வைத்தே 4 பேரும் ஒன்றாக சேர்ந்து டாக்டரை கீழே தள்ளி சரமாரியாக வெட்டுகின்றனர்.
இந்த சம்பவம் நடந்தபோது, எதிரே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒருவர், பைக்கில் வரும் ஒருவர், டாக்டரின் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் இருவர் என 4 பேர் இந்த கொலை காட்சிகளை நேரடியாக பார்க்கின்றனர். ஆனால் யாருமே கொலையை தடுக்க துணியவில்லை.
டாக்டரை வெட்டிச் சாய்த்து விட்டு 4 பேரும் சாதாரணமாக சாலையில் நடந்து செல்கின்றனர். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளன.
கொலை குறித்து விசாரணை நடத்த சென்ற போலீஸார் எதேச்சையாக இந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை போட்டுப் பார்த்து அதிர்ந்துவிட்டனர்.
பின்னணி என்ன?
கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் கூறுகையில், “டாக்டர் சுப்பையாவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பு. அருகே அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு நிலம் தொடர்பாக டாக்டருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஆசிரியர் பொன்னுசாமி என்பவருடைய குடும்பத்துக்கும் 1958 ம் ஆண்டு முதல் தகராறு இருந்து வந்தது.
நிலம் தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் டாக்டருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் பாசில் கூலிப்படையை ஏவி டாக்டரை கொலை செய்திருக்கலாம். சரண் அடைந்துள்ள வழக்கறிஞர்கள் பாசில், அவரது சகோதரர் மோரிஸ் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும்” எனக் கூறினர்.
டாக்டர் வெட்டப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவியின் சகோதரர் மோகன் போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், “ஆசிரியர் பொன்னுசாமி, அவரது தாய் அன்னபழம், மனைவி மேரி புஷ்பா, மகன் பாசில், இவர்களின் உறவினரான வழக்கறிஞர் வில்லியம் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்திருக்கலாம்” என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
கொலையான டாக்டர் சென்னையில் பணிபுரியும் உயர் போலீஸ் அதிகாரியின் உறவினர். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சுவேதா, ஷிவானி என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.