

'ஸ்மார்ட் சிட்டி' திட்டப் பட்டியலில் இடம் பிடிக்க புதுச்சேரி அரசு தரப்பில் மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. புதுச்சேரி- உழவர்கரை நகராட்சி களில் முக்கியப் பகுதிகளை இணைத்து மேம்படுத்தப்பட்ட திட்டம் தயாரிக்கப்பட உள்ள நேரத்தில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தாமல் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பட்டியலில் இடம் கிடைப்பது கடினம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
மத்திய பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு பொறுப்பு ஏற்றவுடன் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தை செயல்படுத்தியது. இத்திட்டத்திற்காக மொத்தம் ரூ.48 ஆயிரம் கோடி செலவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 100 நகரங்கள் அதிநவீன வசதிகள், உள் கட்டமைப்புகள் வசதிகளை பெற இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
நாடு முழுவதும் இத்திட்டத் துக்கான நகரங்களை தேர்வு செய்யும் பணியில் நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சகம் தீவிரமாக இறங்கியது. திட்டத்துக்கான போட்டியில் பங்கேற்கும் வழிமுறை, சமர்ப்பிக்கப்பட வேண்டிய திட்ட வரைவு குறித்து அறிவிப்பு வெளியானது. முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்வாயின.
அப்போது புதுச்சேரியில் இருந்து உழவர்கரை நகராட்சி பரிந்துரைக்கப்பட்டு அனுப்பப் பட்டது. முதல்கட்டமாக தேசிய அளவில் தேர்வான 20 நகரங்களின் பட்டியலில் உழவர்கரை நகராட்சி இடம் பெறவில்லை. அப்போதைய முதல்வர் ரங்கசாமி மத்திய பாஜக அரசின் கூட்டணியில் இருந்த போதும் வாய்ப்பு புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை.
அதன்பிறகு புதுச்சேரி வந்த மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, 'இரண்டாம் பட்டியலில் புதுச்சேரி இடம் பெறும். அதற்கான மாற்று திட்ட வரைவை புதுச்சேரி அரசு அனுப்ப வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். அதை யடுத்து புதிய திட்ட வரைவு அனுப்பப் பட்டது. ஆனால் இரண்டாவது பட்டியலிலும் புதுச்சேரியின் உழவர்கரை இடம் பெறவில்லை.
அதன் பிறகு 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் புதுச்சேரிக்கு நிதியுதவி தர பிரான்ஸும் தயாராக உள்ளதாக மத்திய அரசிடம் புதுச்சேரி அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 3வது சுற்றிலும் புதுச்சேரி பங்கேற்கவில்லை. அதே நேரத்தில் புதுச்சேரி-உழவர் கரை நகராட்சிகளை இணைந்து 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் இணைக்க காங்கிரஸ் அரசு முடிவு எடுத்துள்ளது.
புதுச்சேரி 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட நிலை தொடர்பாக உள்ளாட்சித் துறை செயலர் ஜவஹரிடம் கேட்ட தற்கு, "புதுச்சேரி - உழவர்கரை நகராட்சிகளில் முக்கிய பகுதிகளை இணைத்து புதிய திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. 'ஸ்மார்ட் சிட்டி'க்கான 'லோகோ' வெளியிடப்பட்டுள்ளது. மக்களிடம் கருத்து கேட்பு பணி நடக்கிறது. பலரும், 'நகரம் தூய்மையாக இருக்க வேண்டும். மக்களின் புகார்களுக்கு உள்ளாட்சித்துறை முன்னுரிமை தர வேண்டும்' என்று கூறியுள்ளனர். மக்களிடம் அக்டோபர் வரை கருத்து கேட்க திட்டமிட்டுள்ளோம். மார்ச்சில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்ப உள்ளோம்" என்றார்.
இந்த 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் புதுச்சேரி சேர்க்கப்பட வேண்டும் என்று தான் டில்லிக்கு பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம் வலியுறுத்தி வருவதாக முதல்வர் நாராயணசாமி சொல்கிறார்.
''உள்ளாட்சித்தேர்தல் நடத் தாமல் 'ஸ்மார்ட் சிட்டி' பட்டியலில் புதுச்சேரி இடம் பெறுவது சிரமம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உள்ளாட்சி நிர்வாகம் இருக்கும் நகரமே இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படுகிறது. ஏற்கெனவே இருமுறை விண்ணப்பித்து கிடைக் காமல் போனதற்கு இது ஓர் முக்கியக் காரணம்" என்கின்றனர் பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியதஸ்தர்கள்.
தற்போது இருக்கும் புதுச்சேரி யின் அரசியல் சூழலில் உள்ளாட்சித் தேர்தல் நடப்பதாக தெரியவில்லை. யூனியன் பிரதேசத்திற்கான நகர மேம்பாட்டு சிறப்புக் கூறுகளை எடுத்துச் சொல்லி புதுச்சேரி பகுதியை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் சேர்ப்பது மிக அவசியம். அரசு இதுதொடர்பாக உரிய விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
'ஸ்மார்ட் சிட்டி' புதுச்சேரிக்கு கிடைக்குமா..? புதுச்சேரி புதுப் பொலிவு பெறுமா..? என்பதை ஆளும் ஆட்சியாளர்களே சொல்ல வேண்டும்.