Published : 12 Feb 2014 11:16 AM
Last Updated : 12 Feb 2014 11:16 AM

அரிசி மீதான சேவை வரி கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அரிசி மீதான சேவை வரியை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:

'அரிசியை சேமித்தல், கையாளுதல் போன்ற சேவைகளுக்கு சேவை வரி விதிக்கத் தக்க வகையில், சேவை வரி சட்டத்தின் சில பிரிவுகளை மிகவும் உணர்வுபூர்வமற்ற வகையிலும், பிற்போக்கான வகையிலும் பொருள் கொண்டதால் எழுந்துள்ள வெறுக்கத்தக்க, பாரபட்சமான மற்றும் முற்றிலும் நியாயமற்ற நிலைமையை உங்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்.

பொது விநியோக திட்டத்திற்கு மாநில அரசு செலவிடும் தொகையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூடுதல் சுமையை ஏற்படுத்துவதுடன், அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பு வழங்கும் தமிழக அரசின் முயற்சிகளை பலவீனப்படுத்தும்.

பொருட்களின் சேமிப்பு மீது சேவை வரி விதிக்கப்பட்டபோது, அரிசிக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில், 2002-ம் ஆண்டு சேவை வரி சட்டத்தின் 1-வது விதியின்கீழ் அரிசி ஒரு வேளாண் உற்பத்தி பொருள் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதே கருத்து கடந்த 2004-ம் ஆண்டு ஜுலை மாதம் 9-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையிலும், 2003-ம் ஆண்டு ஜுன் மாதம் 20-ம் தேதியிட்ட அறிவிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

2012-ம் ஆண்டு சேவை வரிக்கு உள்ளாகாத பொருட்கள் பட்டியலைத் தவிர மற்ற எல்லா சேவைகளுக்கும், சேவைவரி விதிப்பு மாற்றியமைக்கப்பட்டபோது, விவசாய விளைபொருள் என்பதற்கான விளக்கம் மாற்றப்பட்டது. 2012-ம் ஆண்டு நிதிச்சட்டம் பிரிவு 65B, உட்பிரிவு 5-ன்கீழ் அரிசியை குறிப்பிட்டுச் சொல்லி அதனை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றுவதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய கிடங்கு வசதி கார்ப்பரேஷன், கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்ட விளக்கத்தில், 2012-ம் ஆண்டு நிதிச்சட்டம் 65B, உட்பிரிவு 5-ன்படி பிறப்பிக்கப்பட்ட புதிய விளக்கமானது, அரிசி உள்ளிட்ட சில பொருட்களை வேளாண் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள போதிலும், தங்கள் கருத்துப்படி அரிசிக்கு ஒரு விவசாய விளைபொருள் என்ற வகையில் தொடர்ந்து சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது.

தங்களது இந்த விளக்கம் சரிதானா என்பது குறித்து தங்களது நிர்வாக அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து மத்திய கிடங்கு வசதி கார்ப்பரேஷன் விளக்கம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக மத்திய நிதியமைச்சர் 2013-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகத்திட்ட இணை அமைச்சருக்கு எழுதிய எண் 354/114/2013 கடிதத்தில், அரிசி மற்றும் விதை நீக்கப்பட்ட, அடிக்கப்பட்ட பருத்தி ஆகியவை 65B, உட்பிரிவு 5-ன்படி வேளாண் விளைபொருள் என்ற விளக்கத்தின்கீழ் வராது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சேவைகளின் மீதான வரி விதிப்பு பற்றிய விரிவான அணுகுமுறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விலக்குப் பெற்ற பொருட்களின் பட்டியல், சரக்கு மற்றும் சேவைவரியை அறிமுகப்படுத்துவதற்கான முன்னேற்பாடாகவே அறிமுகம் செய்யப்பட்டதாகவும், இந்த கட்டத்தில் ஏற்கனவே அமலில் உள்ள விலக்குகளை விரிவுப்படுத்த இயலாது என்றும், மத்திய நிதியமைச்சர் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து 2012-ம் ஆண்டு ஜுலை ஒன்று முன்தேதியிட்டு, அரிசியின் சேமிப்பு மீது சேவை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோதுமை உள்ளிட்ட மற்ற தானியங்கள் விவசாய விளைபொருள் என்றும், எனவே அவற்றின் சேமிப்பு மற்றும் பிற சேவைகள், சேவை வரியிலிருந்து விலக்குப் பெறுவதாகவும், அதேசமயம் அரிசி வேளாண் விளைபொருள் அல்ல என்றும், மத்திய நிதியமைச்சர் மேற்கொண்டுள்ள விநோதமான நிலை பாரபட்சமானது, பிற்போக்கானது, நியாயப்படுத்த இயலாதது.

நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் வாழும், குறிப்பாக அரிசியை பிரதான உணவாகக் கொண்டுள்ள தெற்கு மற்றும் கிழக்கு பகுதி மக்களிடம் பாரபட்சம் காட்டுவது போல, நியாயமற்ற வகையில் அமைந்துள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, வெளி மார்க்கெட்டில் அரிசியின் விலை உயரும். குறிப்பாக உணவுப் பொருட்களின் பணவீக்கத்தால் ஏற்கெனவே அவதியுற்று வரும் சாதாரண மக்களின் மீது இந்த விலை உயர்வு பாதிப்பை ஏற்படுத்தும்.

2012-ம் ஆண்டு ஜுலை முதல் அரிசி மீது சேவை வரி விதிப்பது, அரிசியை சேமித்து சந்தைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோர் மீது பெரும் சுமையை ஏற்படுத்தும். சொந்தக் கட்டடத்தில் அரிசியை சேமித்து வைத்திருந்தாலோ அல்லது வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு வளாகத்தில் சேமித்து வைத்திருந்தாலோ அல்லது வாரியத்திடம் வைக்கப்பட்டிருந்தாலோ அல்லது கமிஷன் ஏஜெண்ட் வசமிருந்தாலோ அத்தகைய சேமிப்புகளுக்கான கட்டணம் மீது சேவைவரி விதிக்கப்பட மாட்டாது என்ற நிலையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை, சந்தை அமைப்பை முற்றாக உருச்சிதைத்துவிடும்.

மத்திய அல்லது மாநில கிடங்கு வசதி கார்ப்பரேஷன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு சேமிப்பு, கிடங்குவசதி மற்றும் கையாளும் கட்டணங்கள் மீது சேவை வரி விதிக்கப்படுகிறது. இது பொது விநியோகத்திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரிசியின் விலையை மேலும் உயர்த்தும். 2013-ம் ஆண்டைய தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் அமலாக்கப்பட்டால், பொது விநியோக அரிசியின் விலை கணிசமாக மேலும் அதிகரிக்கும்.

மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள விளக்கம் பகுத்தறிவுக்கும், பொது அறிவுக்கும் முரணாக உள்ளது. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து அரிசி, ஒரு வேளாண் விளை பொருளாகவே கருதப்பட்டு வருகிறது. அரிசிக்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு அமைப்புகளில் தமிழ்நாடு அரசு ஒரு தெளிவான நிலையை மேற்கொண்டு வருகிறது. எனவே சரக்கு மற்றும் சேவை வரி வாதத்தின் அடிப்படையில் அரிசியை வேளாண் விளை பொருள் விளக்கத்தின்கீழ் கொண்டு வர மறுப்பது ஏற்கத்தக்கதல்ல.

மத்திய நிதியமைச்சகம் சிந்திக்காமல், உணர்வுப்பூர்வமற்ற வகையில், பாரபட்சமான வகையில் எல்லா உணவு தானியங்களிடையேயும் அரிசிக்கு மட்டும் சேமிப்புக்கான சேவை வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாதாரண மக்களிடமிருந்து எவ்வளவு தூரம் விலகிச்சென்றுள்ளது, அவர்களின் கவலையை புரிந்துகொள்ளாமல் இருக்கிறது என்பதற்கு இந்த நடவடிக்கை மற்றொரு உதாரணமாகும்.

எனவே அரிசி விவசாய விளை பொருள் என தெளிவாக அறிவித்து, அதுதொடர்பான அனைத்து சேவைகளுக்கும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்து நிலைமையை தெளிவுப்படுத்த நீங்கள் தனிப்பட்ட முறையில் விரைவாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2012-ம் ஆண்டு ஜுலை ஒன்றாம் தேதியிலிருந்து ஏற்கெனவே விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ள சேவை வரியை திரும்ப அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x