

தமிழகத்தை ஆண்டு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த எம்ஜிஆர், ஒருமுறை கும்ப கோணத்தில், தான் படித்த யானையடி தொடக்கப்பள்ளிக்கு வந்தபோது நெகிழ்ந்து ஆனந்தக் கண்ணீர் வடித்துள்ளார்.
சிறுவயதில் எம்.ஜி.ஆர். கும்ப கோணம் பெரிய தெருவில் தாய் சத்தியபாமா, அண்ணன் சக்ரபாணியுடன் வசித்து வந்தார். அப்போது வீட்டின் அருகிலேயே உள்ள யானையடி தொடக்கப் பள்ளியில் 1922 முதல் 1925 வரை படித்துள்ளார்.
படித்துக் கொண்டிருக்கும் போதே, எம்ஜியாரையும், அவரது அண்ணனையும் பாய்ஸ் நாடக கம்பெனியினர் நாடகத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். அதன்பிறகு எம்ஜிஆர் பள்ளிக்குச் செல்லவில்லை. தொடர்ந்து நாடக நடிகராகி, திரைப்பட நாயகராக வலம் வந்து, தமிழக முதல்வராக இருந்தபோது, கும்பகோணத்துக்கு ஒருமுறை எம்.ஜி.ஆர். வருகை தந்தார்.
அப்போது, தான் படித்த யானையடி தொடக்கப் பள்ளிக்குச் சென்று, பள்ளி சேர்க்கை பழைய பதிவேட்டில் தனது பெயர் இருந்ததைப் பார்த்து, அதில் அவரே கோடிட்டார். பின்னர் பள்ளியின் வகுப்பறையை பார்வையிட்டு ஆனந்த கண்ணீர் வடித்து கண் கலங்கினார்.
எம்ஜிஆர் படித்த பள்ளி என்பதற்காக இதை அவ்வப்போது நகராட்சி நிர்வாகம் பராமரித்து வைத்திருந்தது. கடந்த ஆண்டு ரூ. 70 லட்சம் செலவில் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டு, முகப்பில் எம்ஜிஆர் சிலையும் அமைக்கப்பட்டது. அதன்பின், இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ 9001:2008 சான்று வழங்கப்பட்டது.