

பரங்கிமலையில் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியை சேர்ந்தவர் சிக்கந்தர். இவரது மகள் சமீலாபானு சென்னை ஆயுதப் படையில் போலீஸாக பணியாற்றினார்.
பரங்கிமலையில் ஓர் அறையில் தங்கி இருந்தார். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தங்கி இருந்த அறையிலேயே சமீலா பானு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பரங்கிமலை போலீஸில் புகார் செய்யப்பட்டது. உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் சமீலா பானுவின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை சிக்கந்தர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சமீலா பானு உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் சமீலா பானு 4 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரிந்தது. அதைத்
தொடர்ந்து சமீலா பானு பயன்படுத்திய செல்போன் எண்ணில் அடிக்கடி பேசியவர்கள் குறித்து நடத்திய விசாரணையில் அவருடன் பணியாற்றிய பண்ருட்டியை சேர்ந்த ஆயுதப்படை போலீஸ்காரர் கபில்தேவ் சிக்கினார். அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது.
கபில்தேவிடம் போலீஸார் விசாரித்த போது, சமீலா பானுவை காதலித்ததை ஒப்புக்கொண்டார். இருவரின் நெருக்கத் தால் சமீலா பானு கர்ப்பம் அடைந்ததாகவும், திருமணத்துக்கு தான் மறுத்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். கர்ப்பிணி தற்கொலைக்கு காரணமாக இருந்த கபில்தேவை போலீஸார் கைது செய்தனர்.