சட்டப்பேரவையின் உரிமை பிரச்சினை என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை சிபிஐ விசாரிக்க முகாந்திரம் இல்லை: முதல்வர், பேரவைச் செயலர் பதில் மனு

சட்டப்பேரவையின் உரிமை பிரச்சினை என்பதால் நம்பிக்கை வாக்கெடுப்பை சிபிஐ விசாரிக்க முகாந்திரம் இல்லை: முதல்வர், பேரவைச் செயலர் பதில் மனு
Updated on
2 min read

நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது சட்டப்பேரவையின் உரிமை தொடர் பான பிரச்சினை என்பதால், இது தொடர்பாக சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று முதல்வர் கே.பழனிசாமி, சட்டப் பேரவைச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு ஜூலை 11-ம் தேதி விசா ரணைக்கு வரவுள்ளது. இதற்கிடை யில், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்க அதிமுக மற்றும் அதிமுக ஆதரவு எம்எல்ஏக் களுக்கு ரூ.2 கோடி தொடங்கி ரூ.10 கோடி வரை குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அதிமுக எம்எல்ஏ சரவணன் தெரிவித்ததாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இந்தச் செய்தியை எம்எல்ஏ சரவணன் மறுத்துள்ளார்.

இந்த செய்தியின் அடிப்படை யில், நம்பிக்கை வாக்கெடுப்பில் குதிரை பேரம் நடந்தது குறித்து சிபிஐ மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஸ்டா லின் கூடுதல் மனு தாக்கல் செய் துள்ளார். இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? என்பது குறித்து எதிர் மனுதாரர்கள் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, தமிழக முதல்வர் கே.பழனிசாமி, சட்டப்பேரவைச் செயலாளர் கே.பூபதி ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

முதல்வர்:

இது சட்டப்பேரவை உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. பேரவைக்குள் நடந்தது தொடர்பான எந்த பிரச்சினை குறித்தும் சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறை விசாரிக்க முடியாது. அவர்களுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஸ்டாலின் தொடர்ந்த பிரதான வழக்கிலும் சிபிஐ அல்லது வருவாய் புலனாய்வுத் துறையை எதிர் மனுதாரர்களாக சேர்க்க முடியாது. எனவே கூடுதல் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பேரவைச் செயலாளர்:

அதிமுக எம்எல்ஏக்களிடம் லஞ்ச பேரம் நடந்ததாக ஆளுநரிடம் அளிக்கப் பட்ட புகாரின்பேரில், அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு நம்பிக்கை தீர்மானத்தில் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ, வருவாய் புலனாய்வு இயக்குநர கத்தை எதிர்மனுதாரர்களாக சேர்க்க முடியாது. ஏனென்றால் நம்பிக்கை வாக்கெடுப்பு, பேரவைக்குள் நடந்தநிகழ்வு. அது பேரவையின் உரிமை சம்பந்தப்பட்ட பிரச்சினை. எனவே, ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு பதில்மனுவில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு இன்று விசா ரணைக்கு வருவதாக இருந்தது. முதல்வர், பேரவைச் செயலாளரின் பதில் மனுவுக்கு, தங்கள் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை என ஸ்டாலின் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் முறையிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.சுந்தர் அடங்கிய அமர்வு ஜூன் 30-க்கு தள்ளிவைத்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in