

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுக அடைந்த பெரும் வெற்றி, அரசின் சாதனைகளுக்குக் கிடைத்த அங்கீகாரம் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஏற்காடு தேர்தல் முடிவு நிலவரம் வெளியானவுடன், சென்னையில் தனது வீட்டில் இருந்து வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா, தொண்டர்களைப் பார்த்து கையசைத்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "இந்த வெற்றிக்குப் பாடுபட்ட கட்சியினர், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. இது எல்லாவற்றையும்விட என்னை அன்போடு வரவேற்று மகிழ்ந்தது மட்டுமின்றி, வாக்குகளை அளித்த ஏற்காடு தொகுதி மக்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது என்பதைத்தான் இந்த வெற்றி காட்டுகிறது. குறிப்பாக, ஏற்காடு மக்கள் அரசின் திட்டங்களை வரவேற்று தங்களின் மகிழ்ச்சியையும் அங்கீகாரத்தையும் தேர்தல் மூலம் தெரிவித்துள்ளனர்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.