

கரூர் அன்புநாதனின் முன்ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் அய்யம்பாளை யத்தைச் சேர்ந்தவர் பி.அன்புநாதன்(46). இவர் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வீட்டில் பணம் பதுக்கி வைத்தி ருந்ததாகவும், வரி ஏய்ப்பு செய்ததாகவும் வேலாயுதம்பாளையம் போலீஸார் இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளில் அவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி அன்புநாதன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி வி.எம்.வேலுமணி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு அன்புநாதனுக்கு இரு வழக்குகளில் முன் ஜாமீன் வழங்கும்போது விதிக்கப்பட்ட நிபந்தனையை தளர்வு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.