கொல்லிமலை சூழல் சுற்றுலாவில் இயற்கை உணவு, குடில்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

கொல்லிமலை சூழல் சுற்றுலாவில் இயற்கை உணவு, குடில்: சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு
Updated on
2 min read

கொல்லிமலைக்கு பயணிகளை அழைத்துச் செல்ல சூழல் சுற்றுலா திட்டத்தை நாமக்கல் வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் இயற்கையான உணவு, வனப்பகுதியில் தங்கும் விடுதி, குடில் போன்றவை ஏற்படுத்தப்பட்டிருப்பது சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொல்லிமலை 280 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. கடையேழு வள்ளல் களில் ஒருவரான ஓரி மன்னன் கி.பி., 200-ம் நூற்றாண்டில் கொல்லி மலையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தார் என்பது மலையின் சிறப்பம்சம். மூலிகை வளம் நிறைந்த கொல்லி மலையின் உயர்ந்த சிகரமாக 4 ஆயிரத்து 663 அடி உயரத்தில் அரியூர் சோலை உள்ளது.

இதுபோன்ற பல்வேறு சிறப்புகள் பொருந்திய கொல்லி மலையில் ஓரி மன்னனால் கட்டப் பட்ட அறப்பளீஸ்வரர்கோயில், நாச்சியார் கோயில், எட்டுக்கையம் மன், மாசி பெரியசாமி கோயில் வழிபாட்டு ஆலயங்கள் உள்ளன. அதுபோல், பல நூறு அடி உயரம் கொண்ட ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவி, வாசலூர்பட்டி படகு இல்லம், தாவரவியல் பூங்கா போன்ற சுற்றுலாத் தளங்களும் நிறைந்துள்ளன.

கொல்லிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள் மேற்குறிப்பிட்ட இடங்களைக் கண்டு ரசித்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் சூழல் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். இத்திட்டத் தின் கீழ் கொல்லிமலைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் பெயர் முன்பதிவு செய்து அதற்கான கட்டணத் தொகையை, நாமக்கல் வனச்சரக அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

அதையடுத்து நாமக்கல் வனச்சரக அலுவலகத்தில் இருந்து வனத்துறை வாகனம் மூலம் கொல்லிமலைக்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின், அங்கு இயற்கை சார்ந்த மதிய உணவு வழங்கி குறிப்பிட்ட இடங்கள் சுற்றி காண்பிக்கப்படுகிறது. அதையடுத்து கொல்லிமலை அறப்பளீ்ஸ்வர் கோயில் அருகே அமைக்கப்பட்ட குடில், தங்கும் விடுதி இயற்கை கூடாரம் என, பயணிகள் செலுத்திய கட்டணத்திற்கு தகுந்தாற்போல் இரவு தங்க வைக்கப்படுகின்றனர்.

பின், மறுநாள் காலை மீண்டும் பயணிகள் சுற்றுலா செல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பின்னர், கீழே அழைத்து வரப்படுகின்றனர். இத்திட்டம் கடந்த மாதம் தொடங்கப் பட்டது. அதையறிந்த மக்கள் கொல்லிமலைக்குச் சுற்றுலா செல்ல ஆர்வமுடன் பெயர் பதிவு செய்து வருவதாக, வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நாமக்கல் வனச்சரகர் அ.கனகரத்தினம் கூறுகையில், ‘கொல்லி மலைக்கு சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் பயணிகளை வனத்துறையினர் வாகனத்தில் அழைத்துச் செல்லும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அழைத்துச் செல்லும் பயணிகள் தங்குவதற்காக சூழல் குடில், தங்கும் விடுதி, தங்கும் கூடாரம் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவற் றுக்கு தனித்தனியாக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு கொல்லி மலை உணவு வழங்கப்படுகிறது.

தனியாக உணவுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. சூழல் சுற்றுலா குறித்து நாமக்கல் பேருந்து நிலையம், கொல்லிமலை அடிவாரம், சோளக்காடு ஆகிய இடங்களில் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மேலும் விவரம் அறிய 04286 - 229411 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல், dfonamakkal@yahoo.co.in, dmunkmk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் சுற்றுலாப் பயணிகள் பெயர் முன்பதிவு செய்யலாம்’, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in