

‘நாங்கள் வேறு பிராண்டில் இருக்கிறோம். இது எப்போது மாறும்’ என்று தேமுதிக (அதிருப்தி) எம்எல்ஏ அருண்பாண்டியன் பேசியதால் சட்டப்பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் சனிக்கிழமை கேள்வி நேரத்தின்போது, ‘‘பேராவூரணியில் இருந்து சென்னைக்கு கூடுதலாக விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?’’ என்று தேமுதிக (அதிருப்தி) உறுப்பினர் அருண்பாண்டியன் கேட்டார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ‘‘முதல்வரின் ஆணைக்கிணங்க பேராவூரணியில் இருந்து சென்னைக்கு 1.9.2012 முதல் 246-பி பஸ் இயக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
அதன்பிறகு அருண்பாண்டியன் கூறியதாவது:
எனக்கு அரசியல் அனுபவம் ரொம்ப கம்மி. என் அருகில் இருக்கும் எம்.எல்.ஏ., 200 கேள்வி கேட்டிருக்காங்க. பலவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை என்றார். ஆனால், நான் 10 நியாயமான கேள்விகளைக் கொடுத்தேன். 5 கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. எனவே இந்த அரசை பாராட்டாமல் எப்படி இருப்பது?
தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப கொடுத்து வச்சவங்க. அம்மா ஆட்சியை இந்தியாவே பாராட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை. அவர் அப்படிப்பட்ட பேராற்றல் மிக்கவர். இன்னும் 6 மாதம் கழித்து பஸ் விட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருந்தால் பேராவூரணியில் இருந்து டெல்லி வரைக்கும் பஸ் கிடைத்திருக்கும்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி பேசுபவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். தமிழகத்தில் 40 சீட்டை மக்கள் அம்மாவுக்கு என ஏற்கெனவே முடிவு செய்துவிட்டார்கள்.
வருகிற தேர்தலுக்குப் பிறகு இந்த ஆட்சிதான் டெல்லியில் இருக்கும். உங்களால்தான் (ஜெயலலிதா) நாங்கள் உருவாக்கப்பட்டோம். ஆனால், இப்போது நாங்கள் வேறு பிராண்டில் (தேமுதிக) இருக்கிறோம். இது எப்போது மாறும்?
இவ்வாறு அருண்பாண்டியன் கூறியதும் அவையில் இருந்த முதல்வர் அனைவரும் சிரித்துவிட்டனர்.