

பேச்சிப்பாறை அணையை ரூ.2,019.50 கோடியில் தூர்வார மத்திய அரசு நிறுவனம் அரசிடம் திட்ட வரைவு வழங்கியுள்ளது என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாரக்கோரி குமரி மகாசபை செயலர் ஜெயகுமார் தாமஸ் உயர் நீதிமன்ற கிளையில் பொதுநலன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிட்டார். கோதையாறு வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் எஸ்.கே.சுப்பிரமணியின் பதில் மனுவை கூடுதல் அட்வகேட் ஜெனரல் புகழேந்தி தாக்கல் செய்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முக்கியமானவை. இந்த அணைகள் மூலம் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் 79,000 ஏக்கர் நிலம் இருபோக பாசன வசதி பெறுகிறது. சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகளால் 15,000 ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
இந்த அணைகள் 50 சதவீதம் மண், சகதியால் நிரம்பியுள்ளது என மனுதாரர் கூறியிருப்பது உண்மையல்ல. மத்திய அரசு நிறுவனம் 2013-ல் நடத்திய ஆய்வில் பேச்சிப்பாறை அணையில் 29 சதவீதம் மணல், சகதி நிரம்பியிருப்பதாகக் கூறியுள்ளது. இருப்பினும் இதனால் அணையிலிருந்து விவசாயத்துக்கு தண்ணீர் வழங்குவதில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. பெருஞ்சாணி அணையை பொறுத்தவரை உடனடியாக தூர்வாரும் அளவுக்கு அணையில் மண், சகதி இல்லை.
தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பங்களிப்புடன், நீர்நிலைகளை தூர்வார தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது. அதில் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ரூ.1.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மாவட்டத்தில் 54 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டு வருகிறது.
தமிழக அரசு நபார்டு கடன் வசதியுடன் வரும் ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்நிலைகளை புனரமைக்க திட்டம் வைத்துள்ளது. இதுதவிர கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,051 நீர் நிலைகளை விவசாயிகள் தூர்வார மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.
தமிழக அரசு வைகை, மேட்டூர், அமராவதி, வைகுண்டம் அணைகளுடன் பேச்சிப்பாறை அணையை தூர்வார மத்திய அரசு நிறுவனத்துக்கு 2014-ல் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியில் வைகுண்டம் அணை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை அணையை ரூ.2019.50 கோடி செலவில் தூர்வார வெப்காஸ் நிறுவனம் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது. தற்போதைய விலைவாசி அடிப்படையில் விரிவான திட்ட அறிக்கை வழங்குமாறு வெப்காஸ் நிறுவனத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. திட்ட அறிக்கை வந்ததும் பேச்சிப்பாறை அணையை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுவாக அணைகளை தூர்வாரும் பணி படிப்படியாகவே மேற்கொள்ளப்படும். ஓரிரு மாதங்களில் அணையை தூர்வார முடியாது. எனவே மனுதாரர் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
பின்னர், தமிழகத்தில் மேட்டூர், அமராவதி உள்ளிட்ட 11 அணைகளை தூர்வாரக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்குக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 27-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.