

சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடு, மொட்டை மாடி, பால்கனி தோட்டங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள் கண்காட்சியை சென்னை மாநகராட்சி வரும் 14, 15-ம் தேதிகளில் நடத்துகிறது.
முதல்வர் ஜெயலலிதாவின் 66-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மாநகராட்சி சார்பில் 66 சிறப்பு முகாம்கள், திட்டங்கள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வீடு, மொட்டை மாடி, பால்கனி தோட்டங்களில் சிறந்த தோட்டங்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்பட உள்ளது.
அதுமட்டுமின்றி மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடு, மொட்டை மாடி, பால்கனி தோட்டங்களில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரைகள், தென்னை குலைகள் கண்காட்சியை வரும் 14, 15 ஆகிய இரு தேதிகளில் சென்னை மாநகராட்சி நடத்த உள்ளது. இதில் இடம்பெறும் காய்கறி, பழங்கள், கீரைகள், தென்னங்குலைகளில் சிறந்தவற்றுக்கு முதல், 2-ம், 3-ம் பரிசுகள் வழங்கப்படும். அதோடு, சென்னை மாநகரை பசுமை மாநகராக உருவாக்கும் நோக்கில், வீட்டுத் தோட்டம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் விலையில்லா தென்னங்கன்று வழங்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கண்காட்சி, போட்டிகளில் பங்குபெற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் பூங்கா துறையிலோ, 044-25619283 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ, www.chennaicorporation.gov.in இணையதளத்திலோ திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். கண்காட்சி நடைபெறும் இடம், நேரம் குறித்து இணையதளம், செல்போன், எஸ்எம்எஸ் மூலம் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.