

பக்ரீத் பண்டிகையின் போது ஒட்டகம் வெட்டுவதற்கு அனுமதி வேண்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்திய தேசிய முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனர் அப்துல் ரகிம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒட்டகம் வெட்டுவதற்கு அனுமதி வேண்டி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் உரிய வசதிகள் இல்லாத இடத்தில் ஒட்டகத்தை வெட்டக் கூடாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை கவனத்தில் கொண்டு இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
முன்னதாக பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒட்டகங்களை வெட்டக்கூடாது என்றும், மிருகவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றச்செயல் என்றும் கூறி இதற்கு தடை கேட்டு இந்திய கால்நடைகளுக்கான மக்கள் இயக்கச் செயலாளர் அருண் பிரசன்னா உட்பட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுக்களில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு சட்டவிரோதமாக ஒட்டகங்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த ஒட்டகங்கள் மாநகராட்சியின் இறைச்சிக் கூடங்களில் வெட்டப்படாமல், பொதுமக்கள் முன்னிலையில் வெட்டப்படுகின்றன. உணவுக்கான இறைச்சி விலங்குகள் பட்டியலில் ஒட்டகம் இல்லை. எனவே குர்பானிக்காக ஒட்டகங்களை சட்டவிரோதமாக வெட்டுவதை தடை செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விலங்குகள் பலியிடப்படுவது வழக்கமான ஒன்று. ஆண்டுக்கு ஒரு முறைதான் ஒட்டகங்கள் வெட்டப்படுகின்றன. தற்போது ஒட்டகங்களை வெட்ட இந்திய விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறியிருந்தனர்.