

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றக்கோரி சென்னை மற்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை என அதிமுக தலைமக்கழக செயலரும், உயர்கல்வி அமைச்சருமான பி.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "ஜெயலலிதா தமிழக முதல்வராக நீடிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும், அவரை பெங்களூர் சிறையில் இருந்து தமிழக சிறைக்கு மாற்றக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த மனுக்களை சில விஷமிகள், தீய எண்ணத்துடன் தாக்கல் செய்துள்ளனர் என்றும் இதற்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ஜெயலலிதா மனு செய்துள்ள நிலையில், அவர் மீது நீதிபதிகள் மத்தியில் தவறான எண்ணத்தை விதைக்க வேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதிச் செயல் இது.
ஜெயலலிதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனுக்களை அவரது வழக்கறிஞர்கள் குழுவினர் கவனித்துக் கொள்வார்கள் என்பதால், அவரது அனுமதியின்றி யாரும், எவ்வித மனுக்களையும் நீதிமன்றங்களில் தாக்கல் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.