

வருமான வரித்துறை சோதனை பரபரப்புக்கு இடையில், நேற்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மூத்த அமைச்சர்கள் திடீர் ஆலோசனை நடத்தினர். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் பங்கேற்றார்.
விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணத்தில், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பணம் பிரித்து கொடுக்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளும் விமர்சித்து வருகின்றன.
வருமான வரித்துறையும் சம்பந்தப்பட்ட வர்களிடம் வாக்குமூலங்களை பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச்செயலகம் வந்தார். அவரை, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் உடன் இருந்தார். அமைச்சர் விஜயபாஸ்கரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த திடீர் ஆலோசனைக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.