

குடிநீர் பற்றாக்குறையைப் போக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த ஆண்டில் வழக்கமாக பெய்யும் மழையில் 52 சதவீதம் வரை குறைந்து விட்டது. இதனால் தண்ணீரின்றி விவசாயம் பாதிக்கப்பட்டதோடு, குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 சதவீதம் மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும் தெரிவித்துள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், கோவை, திருச்சி போன்ற மாவட்டங்களும் குடிநீர் பற்றாக்குறையை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் 3 மீட்டர் ஆழம் வரை குறைந்து விட்டது.
எனவே, கர்நாடகம், கேரளம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெற வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து முடிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வாசன் கூறியுள்ளார்.