Last Updated : 17 Jun, 2016 03:49 PM

 

Published : 17 Jun 2016 03:49 PM
Last Updated : 17 Jun 2016 03:49 PM

மாணவர்களை ஊக்குவிக்க ஜிப்மர் தேர்வெழுதினேன்: 44 வயது பள்ளி முதல்வர்

"44 வயதான என்னாலேயே நுழைவுத்தேர்வில் வெல்லும்போது, இளையோர்களாலும் வெல்ல முடியும் என்று நம்பிக்கையூட்டவே ஜிப்மர் தேர்வெழுதினேன்" எனக் கூறியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த 44 வயது பள்ளி முதல்வர் சரவணன்.

எம்எஸ்சி, பிஎட் முடித்துள்ள இவர் ஜிப்மரில் டாக்டர் படிக்க இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று குறிப்பிடுகிறார்.

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது. நுழைவுத்தேர்வில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ அசோக்ஆனந்து புகார் தெரிவித்திருந்தார். அவர் தனது புகாரில் 1972ம் ஆண்டு பிறந்த 44 வயதுடையவர் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக விசாரித்தபோது ஜிப்மர் நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்றவர் தனியார் பள்ளி முதல்வர் என்பது தெரியவந்துள்ளது.

லாஸ்பேட்டை பெத்துசெட்டிபேட் சித்தானந்தா பள்ளியின் முதல்வரான சரவணன், ஜிப்மர் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். இவர் எம்எஸ்சி வேதியியல் பட்டமேற்படிப்புடன் பிஎட் முடித்துள்ளார்.

ஜிப்மர் நுழைவுத்தேர்வு வெற்றி குறித்து சரவணன் கூறியதாவது:

ஜிப்மர் நுழைவுத்தேர்வை 55 வயது வரை எழுதலாம். அந்த அடிப்படையில்தான் நான் தேர்வு எழுதினேன். இதில் எந்த முறைகேடும் இல்லை. நுழைவுத் தேர்வு எழுத சென்றபோது, என்னுடைய வருகை பதிவு பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எங்கள் பள்ளியில் கடந்த ஆண்டுதான் பிளஸ்1 தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுதான் மாணவர்கள் பிளஸ்2 தேர்வு எழுத போகின்றனர். அவர்களுக்கு ஜிப்மர் நுழைவுத்தேர்வு எழுதுவது குறித்து பயிற்சி அளித்து வருகிறோம். ஜிப்மர் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ளும் அனுபவத்துக்காக நான் தேர்வு எழுதினேன்.

ஜிப்மர் நுழைவுத்தேர்வு எழுத மாணவர்களுக்கு சொல்லி தந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் தேர்வு எழுதினேன். தேர்வு அனுபவத்தை மாணவர்களுக்கு கற்று தரவே தேர்வு எழுதினேன். கடந்தாண்டும் தேர்வு எழுதினேன். ஓபிசி பிரிவில் 196வது இடம் கிடைத்தது. இந்த ஆண்டு ஓபிசி பிரிவில் 22வது இடம் கிடைத்துள்ளது. பொதுப்பிரிவில் 52வது இடம் வந்துள்ளேன்.

என் அனுபவம் மூலம் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எழுதுவது குறித்து கற்றுத்தர முடியும். எனது பள்ளி நிர்வாகம் அனுமதித்தால் நான் ஜிப்மரில் சேர்ந்து மருத்துவ படிப்பு படிக்க தயாராக உள்ளேன். ஆனால், இதுவரை டாக்டர் படிப்பை ஜிப்மரில் படிப்பது தொடர்பாக முடிவு எடுக்கவில்லை.

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, நெட் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். அதேபோல்தான் தற்போது ஜிப்மர் தேர்வு எழுதி வென்றுள்ளேன். 44 வயதினால் சர்ச்சை ஏற்படும் என நினைக்கவில்லை. எனக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் 6 மற்றும் 3ம் வகுப்பு படிக்கின்றனர்.

44 வயதான என்னாலேயே நுழைவுத்தேர்வில் வெல்லும்போது, இளையோர்களாலும் வெல்ல முடியும் என்று நம்பிக்கையூட்டுவேன் என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x