Published : 31 Oct 2014 02:54 PM
Last Updated : 31 Oct 2014 02:54 PM

மீனவர்களை மீட்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: தா.பாண்டியன்

மீனவர்களை மீட்க பாஜக நீங்கலாக அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் போராட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது தொயர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு மீனவர்கள் ஐவருக்கு இலங்கை உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது, தமிழக மக்களை ஆழ்ந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. தமிழக மீனவர்கள் எல்லை கடந்து வந்து மீன் பிடிப்பதாகக் குற்றம்சாட்டி சுட்டுக் கொன்ற சம்பவங்களும், படகுகளைக் கைப்பற்றி அவற்றைப் பறிமுதல் செய்து விட்டதாக அறிவிப்பதும், சிறைப்படுத்தி கொடுமைகள் செய்வது போதாது என்று கருதி, போதைப் பொருள் கடத்தியதாக வலிந்து பொய்க் குற்றம் சாட்டி, மரணதண்டனை விதிக்கிற புதிய தாக்குதல் முறையைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளது தெரிகிறது.

பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தவுடன், இலங்கைத் தமிழர் பிரச்சனையும், தமிழக மீனவர் பிரச்சினைக்கும் சுமுகத் தீர்வு காணப்படும் எனக்கூறி வந்தவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகும், கைதுப்படலம் தொடர்ந்தது. அத்துடன் மரணதண்டனை விதிக்கிற துணிவையும் ராஜபக்ச அரசு பெற்றுள்ளது.

சுப்பிரமணியசாமி போன்றோரின் பொறுப்பற்ற அறிக்கைகளும், இந்திய அரசு இலங்கை அரசுடன் குலாவுவதும், தமிழக மீனவர்களின் உயிரோடு, உரிமைகளோடு விளையாட வைத்துள்ளது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை அரசின் நடவடிக்கைகளை கண்டிப்பதுடன், இந்திய அரசு, மரணதண்டனை உத்தரவை ரத்துச் செய்ய வைத்து மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்துகிறது.

தமிழகத்திலுள்ள சுப்பிரமணியசாமி கூட்டத்தைக் கொண்ட பா.ஜ.க நீங்கலாக உள்ள அனைத்துக் கட்சிகளும் தமிழக மீனவர்களை உயிருடன் மீட்கவும் உரிமைகளைப் பெற்றுத்தரவும் ஒரே குரலில் கோர வேண்டுமெனவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x