

தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ராணுவமும், துணை ராணுவமும் யார் வீட்டிலும் நுழையலாம் என்ற நிலைதான் உள்ளது என ராம மோகன ராவ் குற்றம்சாட்டியுள்ளார். இன்னமும் நான் தமிழக தலைமைச் செயலாளராகத்தான் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக தலைமைச் செயலாளராக இருந்த பி.ராம மோகன ராவின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் கடந்த 21-ம் தேதி வருமான வரித் துறையினர் திடீரென சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து, ராம மோகன ராவ் காத்திருப்பில் வைக்கப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்திய நாதன் நியமிக்கப்பட்டார்.
சோதனையைத் தொடர்ந்து ராம மோகன ராவ் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று தகவல் பரவியது. அதன்பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு திங்கட்கிழமை இரவு வீடு திரும்பினார். இந்நிலையில், அண்ணா நகரில் உள்ள வீட்டில் ராம மோகன ராவ் செவ்வாய்க்கிழமை நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எனக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், செய்தித் தொடர்பாளர் தீரன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக தலைமைச் செயலாளர் வீடு, அலுவலகத்தில் சிஆர்பிஎப் உதவியுடன் நடத்தப்பட்ட சோதனை, அரசியலமைப்பு மீதான தாக்குதலாகும். நான் இப் போதும் தமிழக தலைமைச் செய லாளராகவே உள்ளேன். எனக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கவோ, என்னை பாதுகாக்கவோ இந்த அரசுக்கு தைரியம் இல்லை.
நான் புரட்சித் தலைவி அம்மாவால் (ஜெயலலிதா) நியமிக்கப்பட்டவன். எனக்கு எந்த உத்தரவும் வழங்கப்படாததால், தற்போதைய தலைமைச் செயலாளர் பொறுப்பு அதிகாரியாக உள்ளாரா என்பதும் எனக்கு தெரியாது.
துப்பாக்கி முனையில்..
கடந்த 21-ம் தேதி காலை 5.30 மணிக்கு என் வீட்டுக்குள் வருமான வரித் துறையினர் நுழைந்தனர். அவர்கள் கொண்டுவந்த சோதனை அனுமதி கடிதத்தில் என் பெயர் இல்லை. சோதனையின்போது வீட்டில் என்னுடன் மனைவி, மகள், பேத்தி இருந்தனர். என் வீட்டிலும், மகன் வீட்டிலும் சிஆர்பிஎப் பிரிவி னர் துப்பாக்கிமுனையில் சோதனை நடத்தினர்.
என் வீட்டில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 320 மற்றும் என் மனைவி, மகளின் நகைகள் 40 முதல் 50 பவுன்கள் எடுத்தனர். விநாயகர், மகாலட்சுமி, வெங்கடேஸ்வரர் சிலைகள் உட்பட 20 முதல் 25 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருட்களும் எடுத்தனர். வேறு எந்த ஆவணமும் எடுக்கவில்லை.
தலைமைச் செயலாளரான என்னை வீட்டுக் காவலில் வைத்து விட்டு, தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு சோதனையிட என் மகன் பெயரிலான அனுமதி கடிதத்தை எடுத்துச் சென் றுள்ளனர். சோதனைக்கு முன்பு, காவல்துறைக்கு பொறுப்பான உள் துறைச் செயலாளரிடம் அனுமதி கோரியிருக்கலாம். முதல்வர் அங்குதான் இருந்திருக்கிறார். அவரிடம் அனுமதி கேட்டார்களா என்பது தெரியாது.
தலைமைச் செயலாளர் அறையில், பல்வேறு முதல்வர்கள் தொடர்பான ரகசியங்கள் உள்ளன. அவர்கள் எடுத்த முடிவுகள், உத்தரவுகள், ரகசிய அறிக்கைகள், அமைச்சர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான குற்ற புகார்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன. ஆனால், அந்த அறை யில் அவர்கள் எடுத்தது, எம்ஆர்சி கிளப்பில் நான் உறுப்பினராக இருந்தது தொடர்பான ஆவணம் தான். அதில் நான் செலுத்திய கட்டண ரசீதுகளையும், சில தாள்களையும் எடுத்துள்ளனர்.
ஜெயலலிதா இருந்திருந்தால்..
இது மாநில அரசு. இங்கு நுழைய மத்திய அரசுக்கு என்ன வேலை இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால், யாருக்காவது தலைமைச் செயலகத்தில் நுழைய தைரியம் வந்திருக்குமா? என் மகன் பெயரில் சோதனைக்கான கடிதம் வைத்திருந்தனர் என்றால் என் மகனா தலைமைச் செயலாளர். நான் ஜெயலலிதாவிடம் பயிற்சி பெற்றவன். ஒரு நாள் அல்ல, 1994-ல் செங்கல்பட்டு ஆட்சியராக இருந்த போதிலிருந்தே அவர் எனக்கு பயிற்சி அளித்துள்ளார். அவர்தான் என்னை தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்த்தினார்.
ஜெயலலிதா தற்போது இல்லாத நிலையில், கடந்த 32 ஆண்டுகளாக பணியில் இருந்த தலைமைச் செயலாளரான எனக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள், தமிழக அரசு ஊழியர்கள் என்ன ஆவார்கள்.
2 நிமிடம் போதும்
என் வீட்டில் சோதனை செய்ய வேண்டும் என்றால், முதலில் என்னை இடமாற்றம் செய்திருக்க வேண்டும். ஒரு முதல்வருக்கு தலைமைச் செயலாளரை மாற்றுவதற்கு 2 நிமிடங்களே போதுமானது. அல்லது மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட யாரோ முதல்வரிடம் பேசி, இந்த தலைமைச் செயலாளர் எங்களுக்கு வேண்டாம். அவர் பயங்கரவாதி, பழமைவாதி, கடத்தல்காரர் என கூறி இடமாற்றம் செய்துவிட்டு வந்திருக்கலாம். என்னை 26 மணி நேரம் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர்.
பாதுகாப்பு எங்கே?
மெரினாவில் உறங்கும் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக் குமா? தமிழக மக்களுக்கு தற்போது என்ன பாதுகாப்பு உள்ளது. நான் ஜெயலலிதாவின் ஆட்சியில் பணியாற்றியுள்ளேன். 75 நாட்களாக அவரின் உடல்நிலையை பாதுகாத்துள்ளேன். அவரது இறுதிச்சடங்கு, வார்தா புயல் பாதிப்புகளை எவ்வாறு எதிர் கொண்டேன் என்பது எல்லோ ருக்கும் தெரியும்.
தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. சிஆர்பிஎப், சிஐஎஸ்எப், ராணுவம் என யாரும், யார் வீட்டிலும் நுழைந்து விடலாம். தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைதான் உள்ளது. மாநில அரசு, மாவட்ட ஆட்சியர்கள் மீது அவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை.
சேகர் ரெட்டி தொடர்பு
சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவ ருடன் தொழில் தொடர்பும் இல்லை. ஆயிரக்கணக்கான நண்பர்கள் எனக்கு உள்ளனர். நான் பலருக்கு உதவியுள்ளேன். சேகர் ரெட்டியுடன் இணைந்து தொழில் செய்ய வில்லை. எந்த நிலையிலும், தலை மைச் செயலாளர் என்ற வகையில் தவிர வேறு எந்தக் கையெழுத்தும் போடவில்லை. சேகர் ரெட்டி தொழி லதிபராக இருப்பதால் என்னை தெரிந்திருக்கலாம்.
உயிருக்கு அச்சுறுத்தல்
என் மருமகள் பிரசவத்துக்காக ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தான் மகனும் உள்ளார். அங்கிருந்து அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர். தற்போது நான் குறி வைக்கப்பட்டுள்ளேன். என் உயிருக்கு ஆபத்து உள்ளது. இதன் பின்னணியில் உள்ளது யார் என்பது தெரியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா சொன்னதை செய்தேன்
ராம மோகன ராவ் கூறும்போது, "முன்னாள் முதல்வரின் பாதச்சுவடுகளை பின்பற்றி நடக்கிறேன். மாநிலம் தொடர்பாக அவர் கூறிய விஷயங்களை தொடர்ந்து செய்து வந்தேன். ஜெயலலிதாவுக்குப் பிறகு தற்போது தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அவர் இல்லாத சூழலில் என்ன நடந்துள்ளது என்பது தமிழக மக்களுக்கு தெரியும். மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன். நீதிமன்றத்துக்கு செல்ல மாட்டேன். மக்கள் மன்றத்துக்கு செல்வேன்" என்றார்.