Published : 02 Feb 2016 06:00 PM
Last Updated : 02 Feb 2016 06:00 PM

காந்திய கொள்கைப்படி செயல்படுகிறது இ.எஸ்.ஐ. திட்டம்: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கோவையில் மத்திய அரசின் சார்பில் ரூ.580 கோடி செலவில் கட்டப்பட்ட இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாயன்று திறந்து வைத்து உரையாற்றினார்.

பிரதமர் நரேந்திர மோடி இ.எஸ்.ஐ. மருத்துவமனையை திறந்து வைக்கும் நிகழ்ச்சியோடு பல்வேறு மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று மதியம் 2.40 மணியளவில் கோவை வந்திறங்கினார். அவரை தமிழக ஆளுநர் ரோசைய்யா, மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் ஆகியோர் வரவேற்றனர்.

முன்னதாக பிரதமர் மோடியை இந்திய தொழில் வர்த்தக அமைப்பினர், சி.ஐ.ஐ., டெக்ஸ்பிராண்ட் சங்கத்தினர் விடுதியில் சந்தித்து உரையாடிய போது, கோவையை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்தமைக்காக நன்றி தெரிவித்தனர்.

கோவை விமான நிலைய விரிவாக்கம், தொழில் வளர்ச்சிக்கு உதவி போன்ற கோரிக்கைகளையும் இந்த அமைப்பினர் முன்வைக்க, கோவை வளர்ச்சிக்குத் தேவையான அவசியமான திட்டங்கள் பற்றி விரைவில் முடிவெடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

பிறகு இ.எஸ்.ஐ. மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

"இ.எஸ்.ஐ. திட்டம் காந்தியக் கொள்கைகளை அடியொற்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, திறமைக்கேற்ற பங்களிப்பு, தேவைக்கேற்ற பயன்கள் என்ற காந்தியக் கொள்கையின் அடிப்படையில் இயங்குவது.

1952-ம் ஆண்டு கான்பூர் மற்றும் டெல்லியில் 2 மையங்களுடன் தொடங்கிய இ.எஸ்.ஐ. இன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சேர்த்து 830 மையங்களாக வலுவடைந்துள்ளது.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சேவையின் தரத்தை முன்னேற்ற நிறைய பல முன்னெடுப்புகள் செய்து வருகிறோம். தமிழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த இ.எஸ்.ஐ சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். தொழிலாளர்களின் நலன்களைக் காப்பதில் மத்திய அரசு உறுதிப்பாட்டுடன் உள்ளது.

தமிழகத்தில் இ.எஸ்.ஐ. திட்டத்தின் மூலம் சுமார் 28 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். தொழிலாளர்களின் பணித்திறனை வளர்த்தெடுப்பதில் இ.எஸ்.ஐ. முக்கியப் பங்காற்றுகிறது. நெல்லையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 50 படுக்கைகள் 100 படுக்கைகளாக அதிகரிக்கப்படும்.

தற்போது இந்த கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையினால் கோவை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்கள் பயனடைவர்.

போனஸ் பெறுவதற்கான தகுதி உச்சவரம்பை அதிகரிக்க போனஸ் சட்டம் திருத்தப்பட்டுள்ளது."

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x