ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய விடிவெள்ளிகள்: புரட்சியாளர் மார்க்ஸும், பண்டிதர் அயோத்திதாசரும்! - ஒளிரும் புத்தொளியை தூக்கிப் பிடிக்குமா தமிழ் சமூகம்

ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய விடிவெள்ளிகள்: புரட்சியாளர் மார்க்ஸும், பண்டிதர் அயோத்திதாசரும்! - ஒளிரும் புத்தொளியை தூக்கிப் பிடிக்குமா தமிழ் சமூகம்
Updated on
2 min read

புரட்சியாளர் காரல் மார்க்ஸ் பெயரை தவிர்த்துவிட்டு, உலக அரசியல் சரித்திரத்தை எழுத முடியாது. அதேபோல, பண்டிதர் அயோத்திதாசரின் பெயரை மறைத்துவிட்டு தமிழக அரசியல் மட்டுமல்லாமல் இந்திய அரசியல் சரித்திரத்தை எழுத முடியாது.

நவீன உலக வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் புரட்சிகளின் தொடக்கப்புள்ளி மார்க்ஸ் (1818-1883). நவீன தமிழ்ச் சமூக வரலாற்றில் புரட்சிகர சிந்தனை மரபின் ஆரம்பப்புள்ளி அயோத்திதாசர் (1845 - 1914). இந்த இரு பெரும் புள்ளிகளையும் பிறப்பாலும், இறப்பாலும் ‘மே 5’ என்ற புள்ளியில் இணைத்திருக்கிறது வரலாறு. மே 5-ம் தேதி - காரல் மார்க்ஸ் பிறந்த தினம், அயோத்திதாசர் நினைவு தினம்.

ஏறக்குறைய ஒரே காலக்கட்டத்தில் இருவேறு சமூகங்களிலும் நிலவிய ஒடுக்குமுறைக்கு எதிராக ஒலித்த முதல் குரலுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள் இருவரும். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது, அரசியல் கோட்பாட்டு ரீதியாகவும் இருவரிடையே பல ஒற்றுமைகள் உள்ளன.

அறிவாயுதம் ஏந்தியவர்கள்

ஜெர்மனியில் ஒடுக்கப்பட்ட பிரிவில் பிறந்த மார்க்ஸ், மேற்குலக சமூகத்தை பிளவுபடுத்திய வர்க்க வேறுபாட்டுக்கு எதிராகப் போராடினார். ஏழைகளுக்காக ‘தோழன்’ பாதையை தேர்ந்தெடுத்தார். அதேபோல, தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த அயோத்திதாசர் இந்திய சமூகத்தில் புரையோடிக் கிடந்த‌ சாதிய வேறுபாட்டுக்கு எதிராக முழங்கினார். சாதியின் பெயரால் துரத்தி அடிக்கப்பட்ட ஆதி குடிகளுக்காகவும், நிலமும் வரலாறும் பிடுங்கப்பட்டு ஒடுக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்ட பஞ்சமர்களுக்காகவும் ‘தமிழன்’ பாதைக்கு அடிகோலினார்.

மேற்குலகில் நங்கூரம் போல வேர் பரப்பி ஆலமரமாக வளர்ந்த முதலாளித்துவத்தின் ஆணிவேரில் கம்யூனிச சித்தாந்தம் மூலம் மார்க்ஸ் மரண‌ அடி கொடுத்ததுபோல, இந்திய சமூகத்தில் ஜென்ம ஜென்மங்களாக ஊடுவிய வேஷ பார்ப்பனியத்தின் வேரை பவுத்தத்தின் மூலம் வெட்டியெறிந்தார் அயோத்திதாசர். சாதி பேதமற்ற திராவிடர்களை ஒருங்கிணைத்து சமதர்ம சமூகத்தின் விடிவுக்கு ஒளி காட்டினார். அரசும், அதிகாரமும், வறுமையும் விடாமல் துரத்தியபோதும், இவர்கள் இருவருமே சளைக்காமல் அறிவாயுதம் ஏந்தினார்கள்.

ஏங்கெல்ஸும், அப்பா துரையாரும்

விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் நிறைந்த சமூகத்துக்காக இருவருமே இறுதிவரை போராடினர். காரல் மார்க்ஸுக்கு உற்ற துணையாக இருந்தது ஏங்கெல்ஸ் என்றால், அயோத்திதாசருக்கு எல்லாமுமாக இருந்தவர் தங்கவயல் பண்டிதமணி அப்பாதுரையார்.

மேற்கத்திய சமூகம் வர்க்க படிநிலைகளால் ஆனது. எந்த நாட்டின் ஆளும் வர்க்கத்துக்கும் கம்யூனிசம் எதிரானது என உறுதியாகச் சொன்னார் கார்ல் மார்க்ஸ். இந்திய சமூகம் சாதிய படிநிலைகளால் ஆனது. சாதி மத பேதத்தை அழித்தொழிக்க வேண்டும் என்றார் அயோத்திதாசர். இருவர் சொன்னதையும் மண்ணுக்கேற்ற வகையில் புரிந்துகொண்டு, மக்கள் நலனுக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்பதை இப்போது காலம் சொல்கிறது.

சாதி, மத,மொழி, இன தேச எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த மானுட விடுதலைக்காக கலகம் செய்த காரல் மார்க்ஸும், அயோத்திதாசரும் சிறந்த புரட்சியாளர்கள். பல்துறைகளில் புலமை வாய்ந்தவர்கள். சுதந்திரத்தை நேசித்த பத்திரிகையாளர்கள். பழமையைத் தகர்த்த தத்துவஞானிகள். மற்றவர் நலனுக்காக சொந்த வாழ்வில் சோகத்தை சுமந்த தியாக சீலர்கள். எக்கால, எதிர்கால தலைமுறைக்கும் வழிகாட்டும் விடிவெள்ளிகள்!

இதை நன்கு உணர்ந்த மேற்கத்திய அறிவுத்தளம், கார்ல் மார்க்ஸை பெரும் புரட்சியாளராக உலகுக்கு அடையாளப்படுத்தி உள்ளது. அரசாலும், திருச்சபையாலும் ஒதுக்கப்பட்ட இடத்தில் அந்த தாடி சூரியனின் கல்லறை இன்றும் ஒளிர்கிறது. ஆனால், நமது அறிவுத்தளம் அயோத்திதாசரை யாரென்று தெரியாமல் மறைத்து வைத்திருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கருக்கும், பெரியாருக்கும் வழிகாட்டிய அவரது நினைவிடத்தை, சாதி எங்கே ஒளித்து வைத்திருக்கிறது?

அறிவு, ஆற்றல், சிந்தனை, சீர்திருத்தம், மருத்துவம், தத்துவ‌ம் என பல துறையிலும் புத்தொளியாக ஒளிரும் அயோத்திதாசரை அனைவரும் படிக்க வேண்டும். மண்ணுக்கேற்ற வகையில் மார்க்ஸியம் மலர அயோத்திதாசரை தூக்கிப் பிடிக்க வேண்டும்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in