

ஆளும் கட்சியின் பதவிப் போட்டியால் தமிழக உரிமைகள் பறிபோகின்றன என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஆளும் கட்சியான அதிமுகவில் பதவிப் போட்டி மற்றும் பட்டுவாடா சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவது நாடறிந்த ஒன்று. கட்சிக்குள் நடைபெறும் போட்டியாலும், சச்சரவாலும், ஆட்சி முடங்கிப் போய் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆந்திர அரசு பாலாற்றில் அடுத்தடுத்து பல அணைகளை கட்டி விட்டது, தொடர்ந்து கட்டியும் வருகின்றது. ஆந்திர அரசின் அத்துமீறல் குறித்து விவசாயிகளும், அரசியல் கட்சிகளுமே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மாநில அரசு மௌனம் காத்து வருகின்றது. தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூர் கனக நாச்சியம்மன் கோவில் அருகில் பாலாற்றின் குறுக்கே பத்துக்கும் மேற்பட்ட அணைகள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதே கட்டப்பட்டது.இவ்வாறு கட்டபட்டதன் காரணமாக அதிகபட்ச அளவு மழை பெய்தாலும், தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் தடைபட்டுவிட்டது.
இந்நிலையில் தற்போது பாலாற்றின் குறுக்கே குப்பம்- விஜிலாபுரம் என்ற இடத்தில் தரைப்பாலம் என்ற பெயரால் 20 அடி உயரத்தில் தடுப்பணையை கட்டி வருகின்றது. இவை மட்டுமின்றி மேலும் பல அணைகளை கட்ட ஆந்திர அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. பாலாற்றின் மூலம் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காமல் செய்து, முழுவதையும் தங்கள் மாநில விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆந்திர மாநில அரசு செயல்பட்டு வருகின்றது.
பாலாறு கர்நாடகவில் தொடங்கி 93 கி.மீ, கர்நாடக மாநில எல்லைக்கு உட்பட்டும், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ தூரத்திற்கும் பயணித்து தமிழ்நாட்டில் 222 கி.மீ தூரம் பயணித்து, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்கும், குடிநீருக்கும், நிலத்தடி நீருக்குமாக பயன்பட்டு பயணித்து வருகின்றது. ஆந்திர மாநிலத்தில் பாலாறு பயணிக்கும் 33 கி.மீ தூரத்திற்கும் தொடர்ச்சியாக அணைகள் கட்டி வருகின்றது.
222 கி.மீ தூரம் பயணிக்கும் தமிழகத்திற்கு பாலாற்றில் தண்ணீர் வராமல் தடுக்கப்படுவதை தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவது குறித்து, ஆந்திர அரசு ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தமிழக அரசுக்கு தெரிவித்து விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு எவ்வித கவனமும் செலுத்தாத காரணத்தால் பெரும் இழப்பை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
அதிமுக பதவி போட்டியின் காரணமாக அரசுப் பணி முடங்கிப் போய் உள்ளது. இதன் விளைவாக தமிழக உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழக உரிமைகள் அனைத்தையும் விட்டுக் கொடுத்து, தங்களின் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்களின் ஆட்சி இனியும் தொடர வேண்டுமா? என்ற வினா இயல்பாகவே எழுகின்றது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.