விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ சேவை: ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார் - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ சேவை: ஜெ. இன்று தொடங்கி வைக்கிறார் - மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு
Updated on
2 min read

விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செய லகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், 2 வழித் தடங்களில் 45 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை மற்றும் மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. முதலாவது வழித்தடத்தில், கோயம்பேடு - ஆலந்தூர் இடையே மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, 2-வது வழித்தடத்தில் சின்னமலை - விமான நிலையம் இடையே மேம்பாலப் பணி களும், முதல் வழித்தடத்தில் ஷெனாய் நகர் - கோயம்பேடு இடையே சுரங்கப் பாதை பணிகளும் விரைவுபடுத்தப் பட்டன. இதில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ஜூலை மாதமே முடிவடைந்தது. ரயில் நிலையங் களில் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வந்தன. இந்த வழித்தடத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஆய்வு நடத்தி, ரயிலை இயக்குவதற்கான அனுமதியை அளித்தார். இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மெட்ரோ ரயில்கள் இயக் கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், சின்னமலை - விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார். காலை 11.30 மணிக்கு தலைமைச் செயலகம் மற்றும் சென்னை விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்தில் தொடக்க விழா நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் இருந் தபடி ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக் கிறார்.

விமான நிலையம், மீனம் பாக்கம், நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கி மலை ஆகிய பகுதிகளில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களையும் அவர் திறந்து வைக்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

தமிழக அரசின் தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, தமிழக திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் செய லாளர் ச.கிருஷ் ணன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற் கின்றனர்.

ஏற்கெனவே, தொடங்கப்பட்ட வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை சராசரியாக தினமும் 10 ஆயிரம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். 2-வது வழித்தடத்தில் சேவை தொடங்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை 15 ஆயிரமாக அதிகரிக்கும்.

ஆலந்தூரில் இரண்டு வழித்தடமும் இணைவதால், தற்போது விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகள் செல்ல முடியும். ஏற்கெனவே மெட்ரோ ரயில் நிர்வாகம் பயண தூரம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயித் துள்ளது. அதன்படி, விமான நிலையம் - சின்னமலைக்கு ரூ.40 எனவும், விமான நிலையம் - கோயம்பேடுக்கு ரூ.50 எனவும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in