

வாகன சோதனையில் 1.75 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெசன்ட்நகர் 3-வது அவென்யூ மற்றும் 45-வது அவென்யூ சந்திப்பில் சாஸ்திரி நகர் போலீஸார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். பைக்கை சோதனை செய்தபோது, அதில் 1 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் மயிலாப்பூரைச் சேர்ந்த மேனுவல் ரிஜிஸ் (22), மெரினா பகுதியைச் சேர்ந்த கவுதம் ஆண்டனி (23) ஆகியோரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 750 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.
சிறையில் அடைப்பு
கஞ்சா, ஹெராயின் மற்றும் காரை பறிமுதல் செய்த போலீஸார், செனாய் நகரைச் சேர்ந்த யோகராஜ் (20), எழும் பூரைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (22), அண்ணாநகரைச் சேர்ந்த ஜெஸ்வர் சிங் (28) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.