

இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதால், கோவையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போலீஸார் குவிக்கப்பட்டு, கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த 22-ம் தேதி இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால், கோவையில் நேற்று முன்தினம் வன்முறை ஏற்பட்டது. 200-க்கும் மேற்பட்ட கடைகள், 60-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள், 20-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், கார்கள் தாக்குதலுக்கு உள்ளாகின. ஒரு போலீஸ் ஜீப், 2 கடைகள் தீவைக்கப்பட்டன. 5 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டன. வெளிமாவட்ட போலீஸார் 2,355 பேர் கோவைக்கு வரவழைக்கப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டதாக 108 பேரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 270 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
50% கடைகள் திறப்பு
நேற்று மதியம் வரை கோவை மாநகரில் 50 சதவீத கடைகள் திறந்திருந்தன. படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. காந்திபுரம், உக்கடம் பகுதிகளில் பதற்றத்தைத் தணிக்க தலா 500-க்கும் மேற்பட்ட போலீஸார் கொடி அணிவகுப்பு நடத்தினர். பல்வேறு பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.அமல்ராஜ் கூறும்போது, “வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் போன்றவை கண்காணிக்கப்படுகின்றன. வன்முறையில் ஈடுபட்டவர்களை ஆங்காங்கு உள்ள சிசிடிவி கேமராக்கள், வீடியோ கேமராக்கள், புகைப்படங்களின் மூலம் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கிறோம்” என்றார்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க சேலம் சரக டிஐஜி நாகராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் துப்பு துலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கொலை செய்யப்பட்ட சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் அதிகபட்சமாக 2 ஆயிரம் பேர் வரலாம் எதிர்பார்த்தோம். அதற்கு ஏற்ப போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டம் எதிர்பார்த்ததைவிட அதிகரித்ததால் அதில் வன்முறைக் கும்பலும் ஊடுருவிவிட்டது. அதுதான் இத்தனை வன்முறைச் சம்பவங்களுக்கும் காரணமாகிவிட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்றார்.