Published : 16 Jan 2014 06:09 PM
Last Updated : 16 Jan 2014 06:09 PM

இருதரப்பு பேச்சுவார்த்தையில் நாட்டுப் படகு மீனவர்களையும் சேர்க்க கோரிக்கை

தமிழக - இலங்கை மீனவர்கள் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு நாட்டுப் படகு மீனவர்களையும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழக - இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினைகளை பேசித் தீர்க்க 2004, 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் தீர்வை எட்டாமலேயே முறிந்துபோயின.

கடந்த புதன்கிழமை இந்திய-இலங்கை இருநாட்டிலும் காவலில் உள்ள மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை இலங்கை அமைச்சர் ரஜீதா சேனரத்னே இந்திய உணவுதுறை அமைச்சர் சரத்பவார் மீன்வளத்துறை அதிகாரிகளுடன் இணைந்து புதுடெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரஜீதா சேனரத்னே, இலங்கை சிறையில் இருக்கும் அனைத்து தமிழக மீனவர்களும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள். இதுபோல் கைது நடவடிக்கை ஏற்படாமல் இருக்க இரு நாட்டினரும் பங்கேற்கும் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில், ராமேஸ்வரத்தில் நாட்டுப் படகு மீனவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மீனவர் நேசக்கரங்கள் அமைப்பின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ கூறியதாவது,

கடந்த டிசம்பர் 30 அன்று எனது தலைமையில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுதலை செய்ய கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கைக்கு விரைந்துநடவடிக்கை எடுத்த பாரத பிரதமருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நடைபெற உள்ள இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றால் பேச்சுவார்த்தை குழுவில் நாட்டுப்படகு மீனவர் பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும்.

கடல் தொழிலை நன்கு அறிந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களும் பேச்சு வார்த்தை குழுவில் பங்கேற்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் பாரம்பரிய மீனவர் சங்கம், நாட்டுப் படகு மீனவர் சங்கம் மற்றும் மீனவ நேசக்கரங்கள் சார்பில் ஊடகங்கள் முன்னிலையில் எங்கள் கோரிக்கையை வைக்கின்றோம்.

மேலும் ஈரானில் இருந்து திரும்பிய மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்கியது போன்று இலங்கையில் இருந்து தாயகம் திரும்பி வரும் தமிழக மீனவர்களுக்கும் தமிழக அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் பெர்ணான்டோ கூறினார்.

இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் ராயப்பன், மீனவர் நேசக்கரங்கள் செயலாளர் குணசேகரன், ராமநாதபுரம் காங்கிரஸ் கட்சியின் மீனவர் அணி செயலாளர் ரோவன் தல்மேதா, மாவட்ட மாணவரணி காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ராமநாதபுரம் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பாபா செந்தில் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x