

தலித் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அமைதியாக வாழவும் வழிவகை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களைத் தொடர்ந்து ஆந்திராவிலும் இறந்துபோன பசுவின் தோலை உறித்ததற்காக தலித் மக்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் பசுபாதுகாப்பு என்ற பெயரில் தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது சொந்த சகோதர, சகோதரிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சமம் என்று பிரதமர் பேசியிருக்கிறார். ஆனால், அதற்கு நேர்மாறாக சில அமைப்புகள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனவே, அரசியலுக்கோ, மதத்துக்கோ இடம்கொடுக்காமல் இதுபோன்ற சம்பவங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து தலித் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் அமைதியாக வாழவும் வழிவகை செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.