மத்திய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மத்திய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடைகளை குடியிருப்பு பகுதியில் திறக்க தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
2 min read

தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளை குடியிருப்பு பகுதிகள், கிராமங்களுக்குள் திறக்க இடைக் கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. அந்தக் கடைகளை கிராமப்புறங்களிலும், குடியி ருப்புகள் நிறைந்த பகுதிகளிலும் திறக்க டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தங்கள் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்ட மதுபானக் கடைகளையும், கட்டிடங்களையும் அடித்து நொறுக்கி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நெடுஞ்சாலை களில் இருந்து அகற்றப்பட்ட கடைகளை மீண்டும் அதே இடங்களில் திறப்பதற்கு வசதியாக அந்த சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, ‘‘தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றப்பட்ட மதுபானக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு 3 மாதம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத் துள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணா மலை வெங்கிகல் பகுதியைச் சேர்ந்த எஸ்.முருகன் சார்பில் வழக்கறிஞர் எம்.புருஷோத்தமன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘நெடுஞ்சாலைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட மதுபானக் கடைகளை டாஸ்மாக் அதிகாரிகள் தங்களது இஷ்டப்படி கிராமப்புறங்களில் திறந்து வருகின்றனர். உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் விதித்துள்ள நிபந்தனைகளையும் அதிகாரிகள் சரியாக கடைபிடிப்பதில்லை. திருவண்ணாமலை பேருந்து நிலையத்துக்கு பின்புறம் உள்ள வெங்கிகல் அன்னை அஞ்சுகம் நகரில் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையால் அப்பகுதி மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

இப்பகுதியில் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள் போன்றவை உள்ளன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இந்தக் கடை 70 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. இதுவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். எனவே அந்தக் கடையை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கோரியுள் ளார்.

இதேபோல, முதல்வர் கே.பழனி சாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் உள்ள நங்கவள்ளி, மேச்சேரி (மேட்டூர்), தீவனூர் (விழுப்புரம்), தூங்காவி (திருப்பூர்), திருமுல்லைவாயல் (திருவள்ளூர்), வாரணவாசி (அரியலூர்) உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட கிராமங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை அத்துமீறி திறந்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் விடுமுறைக் கால நீதிமன்றத்தில் நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுக்களை விசாரித்த நீதிபதிகள், ‘‘இது தொடர்பாக 5-ம் தேதி (இன்று) டாஸ்மாக் சார்பில் பதிலளிக்க வேண்டும். அதுவரை கிராமப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது. அப்பகுதியில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்’’ என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in