Last Updated : 12 Apr, 2017 05:37 PM

 

Published : 12 Apr 2017 05:37 PM
Last Updated : 12 Apr 2017 05:37 PM

வேள்வியும் கேள்வியும்: யார் இந்த விஜயபாஸ்கர்?

அவ்வளவு தத்ரூபமாக ஜெயலலிதாவின் படத்தை அதற்கு முன் யாரும் வரைந்திருக்க முடியாது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வரையப்பட்டிருந்த அந்த கோலமாவு ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த ஜெயலலிதா அப்போது அதிமுகவில் முக்கிய இடத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ரகுபதியிடம் யார் இந்த ஏற்பாட்டையெல்லாம் செய்தது என்று கேட்கிறார், அதற்கு இந்த ஏற்பாடுகளை மருத்துவ மாணவரான தனது மகன் அண்ணாமலையும், அவரது நண்பரும் மருத்துவ மாணவரான விஜயபாஸ்கரும் ஏற்பாடு செய்ததாக கூறுகிறார். அப்போது தொடங்கியது, விஜயபாஸ்கரின் அரசியல் அத்தியாயம்.

இன்று வருமான வரித் துறையின் வளையத்திற்குள் சிக்கியுள்ள விஜயபாஸ்கரின் அரசியல் வளர்ச்சி அபரிமிதமானது. புதுக்கோட்டை மாவட்டம் இராப்பூசல் கிராமத்தில் பிறந்தவர் விஜயபாஸ்கர். இவரின் தந்தை சின்னதம்பி அதிமுகவின் தீவிர விசுவாசி. அதுவே ரகுபதி அளித்த அறிமுகத்தின் போது ஜெயலலிதாவின் கவனத்தை முழுவதுமாய் பெற வாய்ப்பை அதிகரித்தது.

அதிமுக மாணவர் அணியில் இணைந்த குறுகிய காலத்தில் அதன் மாநில செயலாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 2001-ல் முதல் முறையாக புதுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்று இளம் சட்டப்பேரவை உறுப்பினராக பொறுப்பேற்றார். 2001 முதல் 2006 வரையிலான கால கட்டத்தில் பெரிய அளவில் அதிகாரத்தில் வளர முடியாமல் போனாலும், கட்சிக்குள் தனது செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார். குவாரி, பொறியியல் கல்லூரி என்று தனிப்பட்ட வளர்ச்சியும் விஜயபாஸ்கருக்கு சாத்தியமானது.

ஆனால் 2006-ல் சட்டமன்றத்துக்கு போட்டியிட விஜயபாஸ்கருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் அந்த காலகட்டத்தில் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்த காரணத்தால், விஜயபாஸ்கர் பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள் என கட்சிப் பணியில் தீவிரம் காட்டினார்.

2011-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக முதலில் வெளியிட்ட பட்டியலில் விஜயபாஸ்கருக்கு திருவெறும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. பின்னர் மீண்டும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் விராலி மலை தொகுதி விஜயபாஸ்கருக்கு வழங்கப்பட்டு, 39,000 வாக்குகள் வித்தியாசத்தில் அந்த தேர்தலில் வெற்றி பெற்றார். இதில் முக்கியமானது தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த ரகுபதியை தோற்கடித்து விஜயபாஸ்கர் பெற்ற வெற்றியாகும்.

(அதிமுக போஸ்டர் | படம்: எல்.சீனிவாசன்)

முதல் 2.5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக மட்டும் இருந்த விஜயபாஸ்கருக்கு 2013-ம் ஆண்டு மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி குறித்து மிக கடுமையாக விமர்சனம் செய்து சட்டப்பேரவையில் பேசிய அடுத்த நாளே அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இருப்பினும் ஆட்சி முடியும் வரை செல்வாக்கு பெற்ற இளைய அமைச்சர்கள் பட்டியலில் விஜயபாஸ்கருக்கு முக்கிய இடம் இருந்தது.

2016-ம் ஆண்டு மீண்டும் அதிமுக அரசு அமைந்த போது விஜயபாஸ்கருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டாலும், ஆட்சி அமைந்த சில மாதங்களிலேயே கட்சிப் பொறுப்புகளிலிருந்து ஜெயலலிதாவால் விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக விஜயபாஸ்கருக்கு எதிர் முகாமில் இருந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வைரமுத்துவுக்கு மாவட்ட செயலாளர் பதவி ஜெயலலிதாவால் வழங்கப்பட்டது. இப்போது வரை கட்சிக்குள் விஜயபாஸ்கருக்கு எந்தப் பதவியும் இல்லை.

அப்போலோவில் ஜெயலலிதா இருந்த 75 நாட்கள் முழுமையாக நடந்தவற்றை உடன் இருந்த பார்த்த ஒரே தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும்தான். மூத்த அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கூட விஜயபாஸ்கர் ஆட்களால் தடுக்கப்பட்டதாக பின்னர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியிருந்தார். அந்த அளவுக்கு விஜயபாஸ்கர் சசிகலா தரப்பினரிடம் செல்வாக்கு பெற்றிருந்தார்.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்ற காலகட்டத்தில் அவருக்கு பதிலாக சசிகலா கட்சி, ஆட்சி ஆகிய இரு பொறுப்புகளையும் ஏற்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த ஆர்.பி.உதயகுமார் வரிசையில் விஜயபாஸ்கரும் வலுவாக தனது இடத்தை நிலை நிறுத்தினார்.

ஏற்கெனவே புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி தேடி தந்த அனுபவத்தை, ஆர்.கே.நகரிலும் காட்டினார் விஜயபாஸ்கர். ஆர்.கே.நகர் தேர்தலில் இவர் காட்டிய முனைப்பு மற்ற மூத்த அமைச்சர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆர்.கே.நகர் தொகுதியில் நாடார் சமூக மக்களின் வாக்குகளை பெறுவதற்கு கையாளப்பட்ட உத்திகளில் ஒன்று நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமாரின் ஆதரவைப் பெறுவது. இந்த பொறுப்பு விஜயபாஸ்கரிடம் வழங்கப்பட்டதாகவும், டிடிவி தினகரனை சரத்குமார் சந்தித்த போது, சரத்குமார் உடனேயே வந்திருந்த விஜயபாஸ்கர் முழு சந்திப்பிலும் உடன் இருந்தார்.

இந்தத் தொடர்புதான் வருமான வரித்துறையின் வளையத்திற்குள் விஜயபாஸ்கரோடு சேர்ந்து சரத்குமாரையும் நிறுத்தியது.

வருமான வரித்துறை சோதனை, பல மணி நேரங்கள் நீடித்த விசாரணையில் கேட்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகள் ஆகியவை, மருத்துவர் விஜயபாஸ்கரை கேள்வி வேள்வியில் சிக்க வைத்துள்ள நிலையில் சென்னையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள அதிமுக போஸ்டர்களில் வேள்வியில் விழைந்த கேள்வியின் நாயகனே என்று டிடிவி தினகரன் புகழப்பட்டுள்ளார். கேள்வியின் நாயகன் தினகரன் என்றால் அவருக்காக வேள்வியில் விழுந்தவர் விஜயபாஸ்கரா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x