

உடுமலையில் காதல் திருமணம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்ததோடு, கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரை போலீஸார் முறையே திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் விசாரித்து வரும் நிலையில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் சரணடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சங்கரின் உடல் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதே மருத்துவமனையில்தான் தாக்குதலில் நெற்றியில் கடுமையாகத் தாக்கப்பட்ட கவுசல்யாவும் சிகிச்சை பெற்று வருகிறார்.
குமாரமங்கலத்தில் சங்கரின் உறவினர்கள் சுமார் 4 மணி நேரம் சாலைமறியலில் ஈடுபட்டனர். அதாவது ரூ.10 லட்சம் இழப்பீடும், கவுசல்யாவுக்கு அரசு வேலை கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் குமாரமங்கலத்தில் கடைகள் மீது கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
சங்கரின் உடல் திங்கள் மதியம் வரை பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை, காரணம், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யும் வரை பிரேதப் பரிசோதனை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று கூறி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.
கைது பற்றிய தகவல்களை உடுமல் மற்றும் கோவை போலீசார் எடுத்துக் கூறி குடும்பத்தினரை அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை.
இதற்கிடையே, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உயர்மட்ட தகவல்களின் படி, கவுசல்யா நினைவில் உள்ளார் என்றும் அவர் பேச முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.