ஜெயலலிதா மரணம் குறித்து அவதூறு: கைதான ஊட்டச்சத்து நிபுணர் ராம சீதாவுக்கு ஜாமீன்

ஜெயலலிதா மரணம் குறித்து அவதூறு: கைதான ஊட்டச்சத்து நிபுணர் ராம சீதாவுக்கு ஜாமீன்
Updated on
1 min read

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும், அவரது மரணம் குறித்தும் அவதூறு பரப்பியதாக, அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தீபாவின் ஆதரவாளரான ஊட்டச்சத்து நிபுணர் ராம சீதா (52) கடந்த பிப்ரவரி 25-ல் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி ராம சீதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் ஒன்றும் புதியது அல்ல. ஏற்கனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக முகநூல் மற்றும் வாட்ஸ்-ஆப் போன்ற சமூக வலைதளங்களில் வெளிவந்த கருத்துக்களைத்தான் நானும் பேசினேன். பல அரசியல் தலைவர்களும் மருத்துவமனையின் சிகிச்சை முறை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. அரசியல் களத்தை கவரும் வகையில் நான் இவ்வாறு கருத்து தெரிவித்தேன். இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை.

சமூக வலைதளங்களில் உள்ள பதிவின் அடிப்படையிலேயே போலீஸார் என்னைக் கைது செய்துள்ளனர். ஆகவே எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.பாஸ்கரன், நேற்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in