

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசின் எந்தத் துறையும் அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி யுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமருக்கு நேற்று எழுதிய கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
கர்நாடக அரசு ரூ.5,912 கோடி செலவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட முடிவெடுத்துள்ளது. காவிரி ஆற்றின் வடிநில மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் கர்நாடக அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளது. மேலும் அணை கட்டுவதற்கு மத்திய அரசின் நீர்வளத் துறையின் அனுமதியை பெற திட்டமிட்டுள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
எனவே, அணை கட்டுவதற்கு மத்திய அரசின் நீர்வள மேலாண்மை, மின்சாரம், சுற்றுச்சூழல், வனம், கால நிலை மாற்றம் உட்பட எந்த துறையும் அனுமதி வழங்கக் கூடாது. நீரிலிருந்து மின்சாரம் எடுக்கப் போவதாக கூறி புதிய அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த நினைக்கிறது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு விசாரணையில் உள்ளது.
காவிரியின் குறுக்கே அணை உட்பட எந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கும் தமிழகத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் தமிழக அரசு மனு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையும் நிலுவையில் உள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது புதிய அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டாம். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.