

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட கிளை செயலாளர்கள் கூட்டம் நேற்று தேனியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேசியக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கலந்துகொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 4 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.161 சம்பளம் பெற்றுவந்த கூலித் தொழிலாளர்களுக்கு புதிய வறட்சி உருவாகியுள்ளது.
இந்திய நாட்டில் பொதுப் பங்குகள் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பாக ராணுவ தளவாடங்கள் வாங்க 40 சதவீதம் தனியார் துறையிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு பாதுகாப்பை இழந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொழில் தொடர்பாக கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக விலைவாசிகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
நாங்கள் அறவழியில் போராட் டம் நடத்துகிறோம். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் நாடு தழுவிய மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது என்றார்.