ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு

ஓ.பன்னீர்செல்வத்துக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு: மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சிஆர்பிஎப் (‘ஒய்’ பிரிவு) பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வராக 3 முறை பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. தற்போது எம்எல்ஏவாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தனது அணி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு மாநில போலீஸார்தான் தற்போது பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக டிஜிபிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது.

தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த மார்ச் 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி.க்கள், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து அளித்தனர்.

தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிரட்டல்கள் வருகிறது என்றும் ராஜ்நாத்சிங்கிடம் எம்.பி.க்கள் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்துக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

‘ஒய்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு சிஆர்பிஎப் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) வீரர்கள் 11 பேர் எப்போதும் உடனிருப்பார்கள். இவர்களுக்கு துப்பாக்கியும் வழங்கப்பட்டு இருக்கும். ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in