

கடந்த தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய மொத்தம் 2.61 லட்சம் பேர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு மொத்தம் ரூ.8.35 கோடி வசூலாகியுள்ளது.
தீபாவளி பண்டிகைக்காக அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின் றன. அந்த வகையில், கடந்த தீபாவளி பண்டிகைக்காக தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 9088 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
2.60 லட்சம் பேர்
இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய மொத்தம் 2,61, 994 பேர் ஆன்லைனில் மட்டும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் அரசுப் போக்குவரத்து துறைக்கு ரூ.8 கோடியே 35 லட்சத்து 98 ஆயிரம் வசூலாகியுள்ளது. இதுவே, 2011-ல் தீபாவளி பண்டிகையின் போது மொத்தம் 1,28,285 பேர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததில், ரூ.3.39 கோடி வசூலானது, 2012-ல் மொத்தம் 1,96,299 பேர் முன்பதிவு செய்ததில் ரூ.6.3 கோடி வசூலானது. 2013-ல் மொத்தம் 2,24,719 பேர் முன் பதிவு செய்ததில், ரூ.7.1 கோடி வசூலாகின என்பது குறிப் பிடத்தக்கது.
இது தொடர்பாக ஆம்னி பஸ் களுக்கு டிக்கெட்களை முன்பதிவு செய்து தரும் முன்னணி இணைய தளங்களின் நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘வழக்கமாக ஆம்னி பஸ்களில் செல்வோர் டிக்கெட்களை ஆன்லைனில் அதிகளவில் முன்பதிவு செய்வர். இந்த வருடம் சுமார் 25 சதவீதம் குறைந்துள்ளது. தீபாவளிக்கு தமிழக அரசுப் போக்குவரத்து கழகங்களில் அதிகளவில் பஸ்களை இயக்குவதே முக்கிய காரணம்’’ என்றனர்.