

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 41-வது கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சி நேற்று (25-ம் தேதி) தொடங்கியது. பல்வேறு மலர்கள் இடம் பெற்ற கண்காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
தோட்டக் கலைத்துறை சார்பில் மலர் கண்காட்சியின் நுழைவு வாயிலில் அன்னாசி பழங்கள், மாம்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, பம்பளிமாஸ், வாழைபூ, பாக்கு பூ மற்றும் முள்ளங்கி, கோக்கோ உள்ளிட்ட காய்கறி பழங்களை கொண்டு அலங்கார நுழைவு வளைவு அமைக்கப்பட்டிருந்தது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மலர்காட்சியில் உலகில் சிறந்த கொய்மலர்களான ரோஜா, ஜெர்பிரா, ஆந்தூரியம், கார்னேசன், ஆர்கிட்ஸ், டெய்சி, லிமோனியம் அகபேந்தஸ், ரெட்ஹாட்போக்கர், கிரைசான் மம், அல்ஸ்டோமேரியா, கிலாடியோலஸ் , பேர்டு ஆப் பாரடைஸ். லில்லியம், ஹெலிகோனியம், டெல்பீனியம், ஹெலிகிரைசம் உள்ளிட்ட மலர்களுடன் கோல்டன் ராட், ஆஸ்டர், நிலச்சம்பங்கி, லில்லியம்ஸ் போன்ற மலர்களை கொண்டு 200-க்கும் மேற்பட்ட வடிவங்களில் மலர் அலங்காரம் தோட்டக்கலைத்துறை மூலம் அமைக்கப்பட்டிருந்தது.
கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் சுமார் 10,000 பூந்தொட்டிகளில் பல்வகை ரோஜா மலர்கள், ஆந்தூரியம், ஜெர்பிரா வகைகள், பால்சம், ஆஸ்டர், ஹைட்ரான்ஜியா, பிரஞ்சு மேரிகோல்டு, கிலாடியோலை, லில்லி வகைகள் இடம் பெற்று இருந்தன.
சேலம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கோடை விழாவை பார்வையிட திரண்டனர். வாகன நெரிசலை தவிர்க்க மலைப்பாதையில் போலீஸார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை மெல்லிய தூரலுடன் சாரல் மழை பெய்தது. ஏற்கெனவே குளு குளு சீதோஷண நிலையுடன் மழையும் சேர்ந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையொட்டி மருத்துவ முகாம், மோட்டார் வாகன பழுதுபார்க்கும் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. பயணிகளுக்கு குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று (26-ம் தேதி) மாலை நிறைவு விழா நடக்கிறது.